×

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் ஆட்சியை இழந்து, லஞ்ச, ஊழல் வழக்குகளில் சிறை செல்ல நேரும் என்ற அச்சம்: அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை வளாகத்தில் அளித்த பேட்டி:என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக் கூடாது, அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஏற்கனவே பல நாட்களாக  வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதியில் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ‘இந்தச் சட்டத்தால் எந்த மக்களுக்கும் பாதிப்பில்லை.  குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மக்களுக்கு பாதிப்பில்லை’ என்று தொடர்ந்து தவறான தகவலை அவையில்  அமைச்சர் சொல்லிக்  கொண்டிருக்கிறார். ஏற்கனவே 13 மாநிலங்களில் அந்தந்த மாநில முதல்வர் இதைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். குறிப்பாக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும்  பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் இதைக் கடுமையாக எதிர்த்துத் தீர்மானம் போட்டிருக்கிறார்.

தொடர்ந்து எல்லா மாநிலங்களும் சிஏஏ, என்ஆர்சி,  என்பிஆர் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதியில் இரவு பகல் பாராமல் பெண்கள்,  குழந்தைகள், முதியவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்,  அந்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போட வேண்டும் என்று எடுத்துச் சொன்னோம். அதற்கு அவர்கள் செவி மடுக்கவில்லை. அதனால் அதைக்  கண்டித்து திமுக சார்பில் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்திருக்கிறோம். இந்தப் பிரச்னைக்காக மட்டும் தான் வெளிநடப்பு  செய்திருக்கிறோம். மீண்டும் உள்ளே செல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்  வருமாறு:கடந்த முறையும் நீங்கள் இது சம்பந்தமாக கேள்வி எழுப்பி இருந்தீர்கள். இந்த முறை அமைச்சர் பதில் அளிக்கும் போது நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றக்கூடியச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றினால், அது அந்த சட்டத்தைக் கட்டுப்படுத்தாது என கூறியுள்ளாரே?பிறகு ஏன் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தையாவது வெளியிடுங்கள் என்று சொன்னோம். அதையும் வெளியிடவில்லை.மக்களுடைய அச்சத்தை போக்குவதற்காகத் தான் நாங்கள் விளக்கம் கேட்டிருக்கிறோம்.

அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்களே?மக்களுடைய அச்சத்தை போக்குவதற்காக அல்ல; அவர்கள் (ஆட்சியாளர்கள்) அச்சத்துடன் இருக்கிறார்கள். இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம்  போட்டால் அவர்களது ஆட்சி போய்விடும் என்று பயப்படுகிறார்கள். ஆட்சி போவது மட்டுமல்ல; இவர்கள் மீதான ஊழல், லஞ்சப் புகார்கள், சிபிஐ  விசாரணை போன்ற அத்தனை விவகாரமும் மத்திய அரசின் வசம் உள்ளது. அவர்கள் சிறையில் இருக்க வேண்டும். அந்தப் பயத்தால் தான் இந்தச்  சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போட பயப்படுகிறார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.



Tags : NRC ,CAA ,jail ,NBR , passed ,CAA, NRC and NPR,losing power,, MK Stalin
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்