×

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஏற்பு 7 காங். எம்பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: பட்ஜெட் தொடரில் பங்கேற்க அனுமதி

புதுடெல்லி: மக்களவையில் கடந்த வாரம் 7 காங்கிரஸ் எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான உத்தரவை சபாநாயகர் ரத்து செய்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு, கடந்த 2ம் தேதி தொடங்கியது. ஆனால், முதல் நாளில் இருந்தே டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருஅவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, நாடாளுமன்றம் முடங்கியது.
கடந்த வாரம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் எம்பி.க்கள் சிலர், சபாநாயகர் மேஜையில் இருந்த ஆவணங்களை எடுத்து வீசினார்கள். இந்த செயலில் ஈடுபட்டதற்காக காங்கிரசை சேர்ந்த கவுரவ் கோகாய், டி.என்.பார்த்திபன், தீன் குரைகோஸ், உன்னிதான், மாணிக்கம் தாகூர், பென்னி பெஹானன் மற்றும் குர்ஜீத் சிங் அஜ்லா ஆகிய 7 எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பட்ஜெட் தொடர் முழுவதும் அவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பின்னர் நாடாளுமன்றம் நேற்று கூடியது. மக்களவையை பொறுப்பேற்று நடத்திய ராஜேந்திர அகர்வால் கூறுகையில், ‘‘எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்களுக்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை,” என்றார். அப்போது, காங்கிரஸ் எம்பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். அவர்களுடன் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் எம்பி.க்களும் கலந்து கொண்டனர். இந்த அமளியின் காரணமாக, நண்பகல் 12.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் அவை தொடங்கியவுடன், காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, 7 எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

இதேபோல், காங்கிரஸ், திரிணாமுல், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.க்களும் வலியுறுத்தினர். பின்னர், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், காங்கிரஸ் எம்பி.க்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெறுவது தொடர்பாக தீர்மானத்தை கொண்டு வந்தார். அது, குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், காங்கிரஸ் எம்பி.க்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா, அறிவித்தார். இதனால், இந்த 7 எம்பி.க்களும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேபோல், மாநிலங்களவை தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை எழுப்பினார்கள். கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஏசியாநெட், மீடியா ஒன் ஆகிய தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் 48 மணி நேர தடை விதித்த விவகாரத்தை எழுப்பி கூச்சலிட்டனர். அதே நேரம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் டெல்லி வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்க கோரி முழக்கமிட்டனர். இதனிடையே, காங்கிரஸ் எம்பி.க்கள் சிலர், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா ராஜினாமா செய்ததால் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்ற பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.

அப்போது பேசிய அவை தலைவர் வெங்கையா நாயுடு, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இதர எம்பி.க்கள், டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பது குறித்து நோட்டீஸ் அளித்துள்ளனர். இந்த விவகாரம் வியாழன் காலை அவையில் விவாதிக்கப்படும்” என்றார். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது அவை தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘அவைக்கு கட்டுப்படாத எம்பி.க்களின் பெயரை நான் பகிரங்கமாக அறிவிப்பேன். அவர்கள் மீதமுள்ள நாட்களில் அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியாது. அதேபோல், நான் பெயர் சொல்லும் எம்பி.க்கள் அவைக்கு எந்த வகையில் இடையூறு ஏற்படுத்துகிறார் என்பது பதிவு செய்யப்படும்,” என்றார். இதனை தொடர்ந்து அவை பிற்பகல் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Opposition parties ,Lok Sabha ,Budget Series ,Cancellation ,MPs , Lok Sabha, Opposition parties demand, 7 Cong. MBs, Suspend, Cancellation, Budget Series, Permission
× RELATED ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு