×

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தகவலை அறிந்துகொள்ள 300 பள்ளிகளில் ரூ.1.5 கோடியில் திரவ படிக காட்சிபடுத்தும் கருவி: அமைச்சர் கருப்பணன் தகவல்

சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை பள்ளி மாணவர்கள் அறிந்து  கொள்ளும் வகையில் 300 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு ரூ.1.5 கோடி செலவில் திரவ படிக காட்சிபடுத்தும் கருவி வழங்கப்படும் என்று அமைச்சர் கருப்பணன் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அது வருமாறு:
* தமிழ்நாட்டின் 15 மாநகராட்சிகளுக்கு சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் செயல்படுத்த மாநகராட்சி ஒன்றுக்கு ரூ.8 லட்சம் செலவிடப்படும்.
* சுற்றச்சூழல் துறை, அறிஞர் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பருவநிலை ஸ்டுடியோவுடன் இணைந்து, வேளாண் மண்டலம் வாரியாக, காலநிலை மீள்வளர்ச்சி திட்டத்தை ரூ.332.82 லட்சம் மதிப்பீட்டில் 37 மாவட்டங்களில் தயாரிக்கப்படும். இத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
* கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள சின்ன ஏரியினை 2020-21ம் ஆண்டில் சூழல் மீள் கொணர்வு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.336.00 லட்சத்தில் ஏரி கரையை வலுப்படுத்தியும், தோட்டங்கள் போன்றவை அமைத்தும் சின்ன ஏரி புனரமைக்கப்படும்.
* வாகன விழிப்புணர்வு பிரசாரம்  மூலம், 37 மாவட்டங்களில், மாவட்டம் ஒன்றுக்கு ரூ.1.20 லட்சம் செலவில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
* தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் வழியாக செல்லும் பாலாற்றின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேலூரை தலைமையிடமாக கொண்டு ஒரு பறக்கும் படை ரூ.50 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.
* பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் 300 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு ரூ.1.5 கோடி செலவில் திரவ படிக காட்சிபடுத்தும் கருவி வழங்கப்படும்.
* தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் சுற்றுப்புற காற்றின் தன்மையை கண்காணிக்கும் திறனை அதிகப்படுத்த மாநிலத்தில் மேலும் ஒரு நடமாடும் தொடர் காற்று தர கண்காணிப்பு ஆய்வகம் ரூ.2.5 கோடி செலவில் சேலம் மாவட்டத்தில் நிறுவப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Karupananan ,schools ,Karupanan , Environmental Protection Information, 300 School, Rs 1.5 crore, Liquid Crystal Display, Equipment, Minister Karupanan
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...