×

உயரதிகாரிகள் டார்ச்சர் செய்ததாக கடிதம் எழுதி ஆவின் அதிகாரி தற்கொலை: உறவினர்கள் சாலை மறியலால் மதுரையில் பரபரப்பு

மதுரை: உயரதிகாரிகள் டார்ச்சர் செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு, மதுரையில் ஆவின் உதவி மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை, ஒத்தக்கடையை சேர்ந்தவர் புகழேந்தி (35). இவர் மதுரை ஆவினில் நெய், பால் உற்பத்தி பிரிவில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி. சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அரசுப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 3 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆவினில் பால் வரத்து மற்றும் பால் உப பொருள் உற்பத்தி செய்வதில், ஆண்டுதோறும் நஷ்ட கணக்கு காட்டப்படும். தணிக்கையில் இது சுட்டிக்காட்டப்படும்.

பின்னர் இதுகுறித்து அலுவலர்கள் உரிய விளக்க கடிதம் கொடுப்பர். பல ஆண்டுகளாக இந்த நடைமுறை உள்ளது. கடந்தாண்டு நடந்த தணிக்கையில் ரூ.40 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக ஆவின் பொதுமேலாளர் ஜனனி சவுந்தர்யா, எந்த விளக்கமும் கேட்காமல், கடந்த 7ம் தேதி புகழேந்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த புகழேந்தி, ‘தணிக்கை தொடர்பாக எந்த விளக்கமும் கேட்காமல் பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்து விட்டாரே’ என மற்ற ஊழியர்களிடம் புலம்பி உள்ளார். இந்நிலையில் புகழேந்தி, நேற்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஒத்தக்கடை போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
புகேழந்தி 2014ல் வேலைக்கு சேர்ந்துள்ளார். உதவி மேலாளர் மற்றும் கணக்குப்பிரிவில் பொறுப்புகள் எடுத்து வேலை செய்துள்ளார். கடந்தமுறை திருப்பதியில் லட்டு தயாரிக்க மதுரை ஆவினில் இருந்து ஒரு டன் நெய் அனுப்பப்பட்டது. தரம் குறைவாக இருப்பதாக கூறி அதனை கோயில் நிர்வாகம் மதுரைக்கே திருப்பி அனுப்பி வைத்தது. அதனால் ஆவினுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதற்குரிய பணத்தை புகழேந்தி மற்றும் ஒரு ஊழியர்தான் கட்ட வேண்டும் எனக்கூறி, தலா ரூ.66 ஆயிரத்தை இவரது கணக்கில் கொண்டு வந்து, மாதம் ரூ.20 ஆயிரத்தை சம்பளத்தில் பிடித்தம் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதனடிப்படையில் கடந்த மாதம் ரூ.20 ஆயிரத்தை பிடித்துக்கொண்டனர். இதனை அதிகாரிகளிடம் கேட்டபோது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதனை அவர் வீட்டில் சொல்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த 8ம் தேதி புகழேந்தியை தாய், தந்தை மற்றும் மனைவி சாத்தூரில் உள்ள குலதெய்வம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அழைத்துள்ளனர். ஆனால் புகழேந்தி, ‘லீவு இல்லை. நீங்கள் சென்று வாங்க’ எனக் கூறி அனுப்பியுள்ளார். நேற்று முன்தினம் இரவு வரை போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். நேற்று காலை போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவசரம், அவசரமாக வீட்டிற்கு வந்த அவர்கள் பூட்டிய கதவை தட்டியுள்ளனர்.

நீண்டநேரம் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுதான், ஜன்னல் கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அறையில் இருந்த கடிதத்தில், ‘‘பொதுமேலாளர், உதவி பொதுமேலாளர், மேலாளர் மற்றும் ஆடிட்டர் ஆகியோர் சேர்ந்து தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து, சஸ்பெண்ட் செய்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டேன்’’’ என எழுதப்பட்டு இருந்தது. அதை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு தெரிவித்தனர். சாலை மறியல்: தற்கொலைக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி, மதுரை அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தனர். அதன்பேரில் புகழேந்தியின் உடலை வாங்கிக்கொண்டு, சொந்த ஊரான சாத்தூருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

* விளக்கம் கேட்காமல் சஸ்பெண்ட் செய்தனர்: ஊழியர்கள் குமுறல்
ஆவின் ஊழியர்கள் சிலர் கூறுகையில், ‘‘பால் கொள்முதலுக்கும், பால் உப பொருட்கள் தயாரிப்பிற்கும் எப்போதும், வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். சில நேரம் லாரியில் கொண்டு வரும்போது பால் கெட்டுப்போகும். நெய் உள்ளிட்ட உப பொருள் தயாரிக்கும்போது, பல்வேறு காரணத்தால், கெட்டுப்போக வாய்ப்புண்டு. இதனால் அந்த பொருட்களை நஷ்டக்கணக்கில் காட்டுவோம். இதுதொடர்பாக தணிக்கையில் தெரிவிக்கப்படும். பின்பு எதற்காக நஷ்டம் ஏற்பட்டது என விளக்கக்கடிதம் கொடுப்போம். இதனை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், எந்த விளக்கமும் கேட்காமல், புகழேந்தியை சஸ்பெண்ட் செய்து விட்டனர்’’ என்றனர்.

Tags : suicide , High officials torcher, au officer, suicide, relatives road picket, Madurai
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை