×

கோவையில் பெண் மாவோயிஸ்ட் கைது

* மற்றொருவரும் சிக்கினார்
* பஸ்சில் சென்ற போது பிடிபட்டனர்

கோவை: கோவை ஆனைகட்டியில் பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி நேற்று காலை கைது செய்யப்பட்டார். அவருடன் மற்றொரு பெண்ணும் சிக்கியுள்ளார். கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாகவும், அவர்கள் வனப்பகுதிகளில் துப்பாக்கியுடன் வலம் வருவதாகவும் கடந்த அக்டோபர் மாதம் நக்சல் தடுப்பு அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவை அதிரடிப்படை எஸ்பி மூர்த்தி தலைமையிலான போலீசார் மூலக்கங்கன் வனத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதே சமயம், பாலக்காடு அருகே அட்டப்பாடி மஞ்சகண்டி வனப்பகுதியில் அக்டோபர் 28ம் தேதி கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 5 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆயுத பயிற்சியளிக்கும் சட்டீஸ்கரை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக் உள்பட 3 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் தப்பியோடிவிட்டனர். அவர்களை கேரள, தமிழக போலீசார் ஆனைகட்டி, சிறுவாணி, பில்லூர்  உள்ளிட்ட வனப்பகுதிகளில் தேடி வந்தனர். இந்நிலையில், நவம்பர் 9ம் தேதி பில்லூர் வனப்பகுதியில் 3 பேர் பதுங்கியிருப்பதாக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் தீபக்கை கைது செய்தனர். மற்ற 2 பேரும் தப்பிவிட்டனர். தப்பியவர்கள் ஸ்ரீமதி, சோனா என்று தெரிய வந்தது. அவர்களை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை ஆனைகட்டியில் இருந்து பஸ்சில் கோவை வந்து அங்கிருந்து கர்நாடகா செல்ல ஸ்ரீமதி திட்டமிட்டிருப்பதாக நக்சல் தடுப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் போலீசார் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆனைகட்டி வழியாக கோவை வந்த ஒரு அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பயணம் செய்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அவருடன் பயணம் செய்த பெண் ஒருவரும் சிக்கினார். பின்னர் இருவரும் கோவை கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கோவையில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு கருதி 2 பேரையும் கியூபிரிவு போலீசார் ஈரோடு கொண்டு சென்றனர். ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள கியூ பிரிவு அலுவலகத்தில் வைத்து டிஎஸ்பி வினோத், ஐபி டிஎஸ்பி முசா உசேன் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிரடிப்படையினர் கூறுகையில், ‘‘ஸ்ரீமதி மீது எத்தனை குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளோம். அவருடன் வந்த பெண்ணுக்கும், அவருக்கும் என்ன தொடர்பு என்றும் விசாரிக்கப்படுகிறது,’’ என்றனர். அவரிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags : Woman Maoist ,Goa Woman Maoist ,Goa , Coimbatore, female Maoist, arrested
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...