காங்கிரசில் இருந்து விலகிய அடுத்த நாளே பாஜ.வில் இணைந்தார் ஜோதிராதித்யா: உடனடி பரிசாக மாநிலங்களவை எம்பி சீட்

புதுடெல்லி: காங்கிரசில் இருந்து விலகிய அடுத்த நாளே ஜோதிராதித்யா சிந்தியா பாஜ.வில் தன்னை இணைந்துக் கொண்டார். அவருக்கு பரிசாக, மாநிலங்களவை சீட் தரப்பட்டது. குவாலியர் அரச பரம்பரை சேர்ந்தவரான ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2018ல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்ததும், சீனியாரிட்டி அடிப்படையில் கமல்நாத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்யா நேற்று முன்தினம் திடீரென பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்த பின், காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவருக்கு ஆதரவாக 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் 19 பேர் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதால், ம.பி. அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்து, ஆட்சிக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியில் இருந்து விலகிய அடுத்த நாளே நேற்று பாஜ.வில் ஜோதிராதித்யா ஐக்கியமானார். டெல்லியில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார்.

பேட்டி அளித்த ஜோதிராதித்யா, ‘‘காங்கிரஸ் கட்சி முன்பிருந்ததைப்போல் இப்போது இல்லை. யதார்த்த நிலைகளை ஏற்பதற்கு அக்கட்சி மறுக்கிறது. இதனால் அக்கட்சியில் இருந்தபோது, மக்களுக்கு சேவை செய்ய இயலாமல் நான் மிகுந்த வலியும், நெருக்கடியும் அடைந்தேன். பிரதமர் மோடியின் கரங்களில் நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது,’’ என புகழ்ந்தார். அடுத்த சில மணி நேரத்தில் ஜோதிராதித்யாவுக்கு மாநிலங்களவை சீட் தரப்பட்டது. இதற்கிடையே, பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியிருந்த 19 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களும் நேற்று காலை திடீரென தனி விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

* சீர்குலைக்கும் மோடி ராகுல் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேச அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நீங்கள் மத்தியப் பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை சீர்குலைப்பதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததை கவனிக்க தவறி விட்டீர்கள். தயவு செய்து பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.60க்கு கீழ் குறைத்து, மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா? ஸ்தம்பித்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றமடைய உதவுங்கள்’ என்று கூறியுள்ளார்.

* ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு ஜெயிக்கும்’

காங்கிரசின் மூத்த தலைவரான திக்விஜய் நேற்று அளித்த பேட்டியில், ‘‘2018ல் காங்கிரஸ் வென்றதுமே ஜோதிராதித்யாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதாக கட்சி தலைமை கூறியது. ஆனால், அந்த பதவியில் தனது ஆதரவாளரை நியமிக்கும்படி அவர் கூறினார். அதை கமல்நாத் மறுத்தார். அதற்கு பதிலாக ஜோதிராதித்யா ஆதரவு எம்எல்ஏ.க்கள்  6 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது பதவி விலகுவதாக கூறியிருக்கும் 22 எம்எல்ஏ.க்களில் 13 பேருக்கு கட்சியிலிருந்து விலகும் ஆசையில்லை. அவர்களின் குடும்பத்தினரோடு நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நாங்களும் வெறுமனே தூங்கிக் கொண்டிருக்கவில்லை. ஏதோ 5, 6 எம்எல்ஏ.க்கள் ஜோதிராதித்யாவுடன் செல்லலாம். மற்றபடி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அதில் எங்கள் பெரு்மபான்மையை நிரூபிப்போம், ஆட்சியை காப்போம்,’’ என்றார்.

Related Stories: