×

கொரோனாவுக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் முதல் பலி? மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

* மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு
* மேலும் 3 நாட்டினருக்கு விசா வழங்குவது நிறுத்தம்
* பஸ், ரயிலில் பரிசோதனையை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
* வௌிநாட்டு கப்பல்கள் இந்தியாவில் நுழைய தடை

புதுடெல்லி: துபாயிலிருந்து கர்நாடகா திரும்பிய 76 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல், சளி பாதிப்புடன் இறந்ததால், இந்தியாவில்  கொரோனா வைரசுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக பீதி கிளம்பி உள்ளது. இதைத் தொடர்ந்து, பஸ், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில்  நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, மேலும் 3  நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, வெளிநாட்டு கப்பல்களும் இந்திய துறைமுகத்திற்கு வர  தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க மத்திய  அரசு பல்வேறு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை நாடு முழுவதும் வைரஸ் அறிகுறி உள்ள ஆயிரக்கணக்கானோர்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 65 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய  சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசுக்கு முதல் பலி ஏற்பட்டிருப்பதாக நேற்று வெளியான தகவல் பீதியை கிளப்பியது. கர்நாடகா  மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர் முகமது ஹுசேன் சித்திக், கடந்த 10 நாட்களுக்கு முன்பாக துபாயிலிருந்து தனது சொந்த ஊரான கல்புர்கி  திரும்பி இருந்தார். அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக குல்பர்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவரது சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பி  வைக்கப்பட்டது. இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் ஐதராபாத் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக  நேற்றிரவு கல்புர்கி திரும்பும் வழியில் முதியவர் காலமானார்.

இதனால், அவர் கொரோனா பாதிப்பால் இறந்ததாக தகவல் பரவி உள்ளது.இது குறித்து கல்புர்கி மாவட்ட சுகாதார அதிகாரி ஜப்பார் கூறுகையில், ‘‘முகமது சித்திக்கின் சளி மாதிரிகள் புனே என்ஐஏ ஆய்வகத்துக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு தெரிந்த பிறகே அவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்ததா என்பது உறுதியாகும்,’’ என்றார். எனவே, மத்திய சுகாதாரஅமைச்சகத்தால் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.  கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், வெளிநாட்டிலிருந்து பெங்களூரு திரும்பிய 2 ஐடி நிறுவன  ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பது, ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் உள்ள டெல் மற்றும் மைன்ட்டிரீ நிறுவனத்தின் ஊழியர்கள் பணி நிமித்தமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு சென்று  சமீபத்தில் திரும்பி உள்ளனர். அவர்களிடம் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது  உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, இரு ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இரு ஊழியர்களுடன்  உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டினரிடம் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு ஊழியர்கள் வேலை பார்த்த  அலுவலக அறையில் இருந்த அனைத்து ஊழியர்களும் அடுத்த 14 நாட்களுக்கு வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேபோல், மகாராஷ்டிராவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று  தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 85 வயது முதியவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர் துபாயிலிருந்து  திரும்பியவர். வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ள கேரளாவில் வைரஸ் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வரும் முதிய தம்பதியினரின் உடல்நிலை கவலைக்கிடமாகி உள்ளது. அவர்கள் கூடுதல் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் வைரஸ் தொற்று வேகமாக பரவிக் கொண்டிருப்பதால், அதை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக, கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளை  கடந்து வரும் சர்வதேச சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் நுழைய மத்திய கப்பல் துறை அமைச்சகம் ேநற்று தடை  விதித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உட்பட நாட்டின் அனைத்து முக்கிய துறைமுகங்களுக்கும் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல்,  பொது போக்குவரத்து சாதனங்கள், பஸ், ரயில் நிலையங்களில் சுகாதார பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளுமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய  அரசு அறிவுறுத்தி உள்ளது.மேலும், கொரோனா வைரசால் அதிகம் பாதிப்புள்ளாகி இருக்கும் பிரான்ஸ்,  ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகைளச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர  தற்காலிக தடையும் நேற்று  விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்டினருக்கு இன்றைய தேதிவரை வழங்கப்பட்ட வழக்கமான மற்றும் இ-விசா ரத்து   செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, இத்தாலி, ஈரான்,  தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீன நாட்டினர் இந்தியா வர தற்காலிக தடை  விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வுகான் டாக்டர்களுக்கு அதிபர் ஜின்பிங் பாராட்டு
சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர்  பலியாகி வந்த நிலையில், கடுமையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. வுகான் தனிமைப்படுத்தப்பட்டு 3,000 டாக்டர்கள் முழு நேர  பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்நகரம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. பல நிறுவனங்கள் வுகானில் தனது  செயல்பாட்டை தொடங்கி உள்ளன. இதற்கிடையே, முதல் முறையாக அந்நாட்டு அதிபர் ஜின்பிங் நேற்று அங்கு மருத்துவ பணிகளை ஆய்வு செய்தார்.  அப்போது வுகான் மருத்துவமனை டாக்டர்களை அவர் வெகுவாக பாராட்டினார். ‘வைரஸ் தாக்கத்தின் போக்கை மாற்றிவிட்டீர்கள்’ என டாக்டர்களை  அவர் புகழ்ந்தார். நேற்று மட்டும் வுகானில் வைரசால் 22 பேர் பலியாகி உள்ளனர். சீனாவின் மொத்த பலி எண்ணிக்கை 3,158 ஆக அதிகரித்துள்ளது.

லடாக், காஷ்மீரில் கல்வி நிறுவனங்கள் மூடல்
லடாக், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் விளையாட்டு மைதானங்கள்,  ஸ்போர்ட்ஸ் கிளப்புகள் மறுஉத்தரவு வரை மூடப்பட வேண்டுமென நகர் மேயர் ஜூனைத் அஜிம் மட்டு உத்தரவிட்டுள்ளார். இதேபோல், லடாக்கில்  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கும் வரும் 31ம் தேதி வரை  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் திரையரங்குகளும் வரும் 31ம் தேதி திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பரவியது
அண்டை நாடான இலங்கையில் நேற்று முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. இத்தாலி சுற்றுலா பயணிகளுடன்  தொடர்பில் இருந்த சுற்றுலா வழிகாட்டியான 52 வயது நபருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் உடனடியாக தனி வார்டில் சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறார். இதே போல, துருக்கி, பொலிவியா உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட நாடுகளில் முதல் முறையாக நேற்று கொரோனா தொற்று  பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பஸ்சை விட குறைந்தது விமான கட்டணம்
ெகாரோனா பீதியை தொடர்ந்து விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெங்களூtரில் இருந்து  கேரளா செல்லும் விமானங்களில் பாதிக்கும் மேல் இடங்கள் காலியாக உள்ளன. இதனால் விமானக் கட்டணம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.  பெங்களூரில் இருந்து கொச்சிக்கு விமான கட்டணம் 1122 வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனியார் பஸ்சிற்கு ₹2000 வசூலிக்கப்படுகிறது. பெங்களூரில்  இருந்த  திருவனந்தபுரத்திற்கு 2500ம், கோழிக்கோடு ₹2600ம், கண்ணூருக்கு 2900ம் வசூலிக்கப்படுகிறது.

கொரோனா பிடியில்
சிக்கிய உலக நாடுகள்
கோவிட்-19 கொரோனா வைரஸ் இதுவரை 120 நாடுகளுக்கு பரவி உள்ளது. மொத்தம் 1 லட்சத்து 21,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,377 பேர்  பலியாகி உள்ளனர். சீனாவை தவிர்த்து மற்ற நாடுகளில் பலியானோர் எண்ணிக்கை 1,205 ஆகும். நேற்றைய நிலவரப்படி, அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளும் அங்கு பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஈரானில் ஒரே நாளில் 63 பேர் பலி
இத்தாலியை தொடர்ந்து ஈரானில் கொரோனா பலி தீவிரமாக அதிகரிக்கிறது. நேற்று ஒரே நாளில் அந்நாட்டில் 63 பேர் பலியாகி உள்ளனர். இதனால்  மொத்த பலி எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 10,000த்தை தாண்டி உள்ளது. அங்கு 631 பேர்  பலியாகி உள்ளனர்.

கேரளாவில் தம்பதி கவலைக்கிடம்
கேரளாவில் கொரோனா வைரசால் ஏற்கனவே  பாதிக்கப்பட்டுள்ள, இத்தாலியில் இருந்து வந்த வாலிபரின் 93 வயது தந்தை மற்றும் 85 வயது தாய்  கோட்டயம் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனை தனி வார்டில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்த  நிலையில்  அவர்களது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவர்கள் கூடுதல் அவசர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டுள்ளனர்.

இத்தாலியில்  இருந்து கொரோனா  பாதிப்புடன் வந்த 3 பேரும் உறவினர் வீடுகள், பொது நிகழ்ச்சிகளுக்கு  சென்றுள்ளனர். இவர்கள் சென்ற இடங்கள்  அடங்கிய  ரூட்மேப் தயாரிக்கப்பட்டு  அவர்களுடன் பழகியவர்கள், அருகில் இருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்படு  வருகிறது. இதுவரை 719 பேர்   விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொச்சியில் உள்ள ஒண்டர்லா, பெரியார்  வன  விலங்குகள் சரணாலயம், பாலக்காடு மாவட்டத்தில் சைலண்டு வேலி  சுற்றுலாத்தலங்கள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

இங்கிலாந்து சுகாதார அமைச்சருக்கு வைரஸ்
இங்கிலாந்தின் சுகாதார இணை அமைச்சரான நடின் டோரிஸ் (84 வயது) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. அவர் தனது  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் இங்கிலாந்து அரசியல் தலைவர் இவர்.  நாடாளுமன்றத்திற்கு தினசரி சென்று வந்த இவர் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டவர்களை அடிக்கடி சந்தித்து பேசியிருக்கிறார். இதனால்,  அந்நாட்டு நாடாளுமன்ற எம்பி.க்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டுமென பல எம்பிக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். இதுவரை இங்கிலாந்தில் 373 பேருக்கு வைரஸ் உறுதியாகி உள்ளது. 6 பேர் பலியாகி உள்ளனர்.

தேசிய பாதுகாப்பு படையை களமிறக்கியது அமெரிக்கா
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,000த்தை தாண்டி உள்ளது. வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 31 ஆக  அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க மக்கள் பீதி அடைந்துள்ளனர். நியூயார்க்கில் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே  பணியாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்குள்ள அலுவலகங்கள், பொது இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முக்கிய பல்கலைக்  கழகங்கள் வகுப்புகளை ரத்து செய்துள்ளன. ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  நியூயார்க்கின் புறநகரான நியூ ரோச்செல்லி தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இங்கு தேசிய பாதுகாப்பு படை களமிறக்கி மருத்துவ பணிகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நோயாக அறிவித்து கர்நாடகாவில் அரசாணை
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் முதியவர் இறந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், கொரோனோவை தொற்று நோயாக கர்நாடக அரசு நேற்று  அறிவித்தது. இதுதொடர்பாக கர்நாடக மாநில  தொற்றுநோய் தடுப்பு சட்டம்-1987, விதி 2,3,4 ஆகிய பிரிவின் கீழ்  அரசாணை வெளியிட்டது.  இச்சட்டத்தின்படி, இந்த வைரசால் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாநிலம் முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு  வசதிகளை செய்ய வேண்டும். இச்சட்டத்தை மீறும் தனி நபர்கள்,  அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது  இந்திய தண்டனை  சட்டம் 188ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்சோ வாலிபருக்கும் பாதிப்பு?
காசர்கோட்டில் சிறுமி பலாத்கார வழக்கில் தேடப்பட்ட வாலிபர் நேற்று மங்களூரில் கைது செய்யப்பட்டார். காசர்கோடு நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சிறையில் அடைக்க சென்றபோது அவருக்கு கொரோனா  அறிகுறி தென்பட்டது. மேலும் அவர் மலேசியா சென்று திரும்பியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் காசர்கோடு மருத்துவமனையில் தனி  வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் இந்தியர் பலி
இங்கிலாந்தின் வாட்போர்ட் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த  மனோகர் கிருஷ்ணா பிரபு, கொரோனா வைரஸ் தாக்கி பலியாகி  உள்ளார். கொரோனாவுக்கு பலியாகும் முதல் இந்திய வம்சவாளி நபர் இவர். 80 வயதான மனோகர் கிருஷ்ணாவின் மகன் மற்றும் மனைவி ஆகியோர்  மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர். இத்தாலியில் இருந்து வந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரை சந்தித்த  மனோகருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் வைரஸ் தொற்று ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை  பலனின்றி இறந்துள்ளார்.

ஈரானில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை
கொரோனா வைரஸ் தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘உலகம் முழுவதும் உள்ள  இந்தியர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. ஈரானில் சிக்கியுள்ள மீனவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும்  பத்திரமாக உள்ளனர். அவர்கள் யாரும் வைரசால் பாதிக்கப்படவில்லை. இதுவரை 108 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வைரஸ் இல்லை  என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 529 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள இந்தியர்களிடம் ரத்த  மாதிரிகள் பெற்று ஆய்வுக்கு அனுப்ப 6 இந்திய மருத்துவ சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஈரானில் இருந்து 58 பேர் நாடு  திரும்பி உள்ளனர்,’’ என்றார்.

Tags : Karnataka ,victim ,states ,government , Population, Karnataka, first victim , states
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!