×

மாணவர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: விசாரணை நடந்ததால் விடுப்பில் சென்றார்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். நான் உங்களிடம் பேசுவதை உங்கள் பெற்றோர் மற்றும் யாரிடமாவது சொன்னால் உங்களுக்கு மார்க் போட மாட்டேன். இந்த ஆண்டு பாஸ் பண்ண முடியாது என்று எச்சரித்துள்ளார். இதில் ஒரு சில மாணவர்களை ஆசிரியர் கட்டி வரும் வீட்டிற்கான வேலையை செய்ய அனுப்பி வைப்பார்.

மாலையில் வந்ததும் அவர்களுக்கு ரூ.50 வீதம் கொடுத்து அனுப்புவார். 8 மாணவர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தினந்தோறும் ஆள் மாற்றி மாற்றி அனுப்பி வைப்பார். இவரது செயல்பாட்டை யாரும் கண்டு பிடிக்கவும் இல்லை. கண்டுகொள்ளவும் இல்லை. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தலைமை ஆசிரியருக்கு தெரியாமல் அந்த ஆசிரியர் மாணவ, மாணவிகளை டூர் அழைத்து சென்றுள்ளார். பெண் ஆசிரியர் கும்பகோணத்தில் வந்து சேர்ந்து கொள்வார் என்று கூறியுள்ளார். கும்பகோணத்தில் ஆசிரியை எங்கே சார் என்று மாணவர்கள் கேட்டதற்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டார்.

தஞ்சை பெரியகோயில், கல்லணை போன்ற பகுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளார். மாணவிகளும், மாணவர்களும் சேர்ந்து உட்காருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் மாணவிகள் நெளிந்துள்ளனர். ஆசிரியர் வேண்டுமென்றே இதுபோல் செய்கிறார் என்ற கோபத்தில் மாணவிகள் ஒருவித கலக்கத்தில் இருந்தனர். ஆனாலும் ஆசிரியர் தனது சில்மிஷ வேலையை தொடர்ந்து கொண்டே இருந்தார். யாராவது வெளியில் சொன்னால் நடப்பதே வேறு என்று மிரட்டியுள்ளார்.வீட்டிற்கு வந்ததும் மாணவிகள் பெற்றோரிடம் சொல்ல வில்லை. பொதுத்தேர்வில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் மறைத்து விட்டனர்.

கடந்த வாரம் இதுபற்றி அறிந்த ஒரு மாணவியின் பெற்றோர் வெளியில் சொன்ன போது தான் அந்த ஆசிரியர் செய்த அனைத்தும் ஒவ்வொன்றாக வெளியில் தெரிய தொடங்கியது. இதையடுத்து அந்த ஆசிரியரை அழைத்து பெற்றோர் விசாரித்துள்ளனர். அவரும் வேறுவழியின்றி நடந்த தவறுகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டார். இந்த பிரச்னை குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தீவிர விசாரணை மேற்கொண்டு நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் விடுப்பில் சென்று விட்டதால் இந்த பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Tags : Teacher ,home Teacher ,home , Student, sexual harassment, teacher
× RELATED கணவருக்கு கொரோனா என சந்தேகம்: ஆசிரியை தற்கொலை