முகமூடி அணிந்து தர்மசாலா புறப்பட்ட சாஹல்; நாளை இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒன்டே: பாண்டியா, ஷிகர் தவான், புவனேஷ் வருகை பலன்தருமா?

புதுடெல்லி: இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (மார்ச் 12) தர்மசாலாவிலும், 2வது போட்டி லக்னோவில் 15ம் தேதியும், கடைசி மற்றும் 3வது போட்டி 18ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. இந்தியாவிற்கான சுற்றுப்பயணத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்க தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஒரு மருத்துவ குழு தர்மசாலா வந்துள்ளது. தென்னாப்பிரிக்க வீரர்கள்தான் இப்படி என்றால், இந்திய வீரர்களும் கொரோனா வைரஸ் பீதியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், டெல்லி விமான நிலையத்திலிருந்து தர்மசாலா செல்லும் வழியில் முகமூடி அணிந்தபடி வந்தார். விமான நிலையத்தில் முகமூடி அணிந்திருக்கும் படத்தை சாஹல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், ‘இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ளதால், வீர்கள் வழக்கமான கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தலைத் தவிர்க்கலாம்’ என்று கூறினார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி,

சொந்த மண்ணில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் எழுச்சி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் ஆகிய அனுபவ வீரர்கள் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளனர். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அடைந்த தோல்விக்கு மருந்தாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் இந்திய அணிக்குச் சாதகமாக அமையும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: