×

கொரோனா வைரஸ் பற்றி இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசனை கூற மருத்துவ குழு உள்ளது: புவனேஷ்வர் குமார் பேட்டி

டெல்லி: கொரோனா வைரஸ் பற்றி இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆலோசனை கூற மருத்துவ குழு உள்ளது என பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார்.  தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது, கேப்டன் குயின்டான் டி காக் தலைமையில், இந்த மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வருகிற 12-ம் தேதி தர்மசாலாவில் உள்ள இமாசல பிரதேச கிரிக்கெட் கூட்டமைப்பு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.  2-வது போட்டி 15-ம் தேதி லக்னோவில் உள்ள ஏ.பி. வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்திலும், 3-வது  போட்டி கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று வரை 50 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், இந்திய வலது கை மிதவேக பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை வழங்குவதற்காக எங்களுக்கென மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று உள்ளது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்ய கூடாது என்பது பற்றி அவர்கள் எங்களுக்கு அறிவுரை வழங்குவார்கள்.  அவர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று நடக்க உள்ளது. பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்பொழுது, எச்சிலை தொட்டு பந்தில் வைத்து, தேய்த்து விட்டு அதனை வீசுவது வழக்கம். ஆனால், இந்த முறை பந்து வீச்சாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்கள் அறிவுரை தருவார்கள்.  அதற்கேற்ப, பந்து வீசும்பொழுது அந்த ஆலோசனைகளை நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.

Tags : team ,Indian ,cricket team ,interview ,Bhuvneshwar Kumar , Medical team , Indian cricket team ,coronavirus,Bhuvneshwar Kumar,Interview
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...