காங்கிரஸ் கட்சியின் 7 மக்களவை உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற்றார் சபாநாயகர் ஓம் பிர்லா!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 7 மக்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை சபாநாயகர் ஓம் பிர்லா வாபஸ் பெற்றுள்ளார். கடந்த 2ம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 23ம் தேதிலியிலிருந்து தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இடதுசாரி கட்சிகள் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையின் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, நாடாளுமன்ற இரு அவைகளிலும் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரினர். ஆனால் மக்களவை சபாநாயகர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து அவை நடைபெற்று கொண்டிருந்ததால், காங்கிரஸ் எம்.பிக்கள் சபாநாயக்கர் இருக்கைக்கு அருகில் சென்று அவர் கையிலிருந்த காகிதத்தை கிழித்து எறிந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு மாணிக் தாகூர், கவுர் கோகாய், பிரதாபன், தீன் சூரிய கோஸ், உண்ணிதன் உட்பட 7 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. நாளுமன்றத்தில் இன்று இந்த விவகாரத்தை எழுப்பிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று 7 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா திரும்ப பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, 7 எம்.பி.க்களும் கூட்டத்தொடரில் இனி பங்கேற்க முடியும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>