சேலையூர் அருகே காரில் இருந்து சுமார் 1.5 டன் கொண்ட 16 செம்மரக்கட்டைகள் பறிமுதல்: போலீஸ் விசாரணை

வேளச்சேரி: சேலையூர் அருகே காரில் இருந்து சுமார் 1.5 டன் கொண்ட 16 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் அடுத்த காமராஜபுரம், மசூதி காலனி அருகே சாலையோரம் கார் ஒன்று கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. சேலையூர் ரோந்து வாகன போலீசார் அங்கு சென்று பார்த்தபோது காருக்குள் கட்டைகள் இருந்துள்ளது. சந்தேகமடைந்த போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் ஒரு நபர் காரை நிறுத்தி விட்டு செல்வது தெரிய வந்தது. விசாரணையில் அவர் மேடவாக்கத்தை சேர்ந்த ஷாஜகான் என்பது தெரிய வந்தது.

அவரை கைது செய்த போலீசார் விசாரணையில் அவரது நண்பர் மூசா கனி என்பவர் காரை கொடுத்ததாகவும் மசூதி காலனியில் விட்டுவிட சொன்னதாகவும் அதனால் விட்டுவிட்டு வந்தேன் என்றார். மேலும் தன் வீட்டில் செம்மர கட்டைகளை வைத்துக் கொள்ளுமாறும், அவ்வாறு வைத்து கொண்டால் பணம் தருவதாகவும் மூசா கனி கூறியதாக போலீசில் வாக்கு மூலம் அளித்தார். காரில் இருந்து சுமார் 1.5 டன் கொண்ட 16 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ஷாஜகான் வீட்டை சோதனையிட உள்ளனர். இந்த வழக்கில் மூசா கனியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: