×

இந்தியாவில் முதன்முறையாக கொரோனா தாக்குதலுக்கு ஒருவர் பலி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

புதுடெல்லி: சீனாவில் வுகான் நகரில் உருவான `கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியா உள்பட 104க்கும் அதிகமான  நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே இந்த வைரஸ் தாக்குலுக்கு இதுவரை 3,136 பேர் பலியாகி  உள்ளனர். இருப்பினும், சீன அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் பலி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை இந்த  வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆக இருந்தது. இது நேற்று ஒரே நாளில் 14 அதிகரித்து 61 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் 8 பேருக்கும், மகாராஷ்டிராவில் 3 பேருக்கும், கர்நாடகாவில் 3 பேருக்கும் நேற்று ஒரே நாளில் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் ஒருவரும்,  கேரளாவில் 14 பேரும், கர்நாடகாவில் 4 பேரும், உத்தர பிரதேசத்தில்  9 பேரும், டெல்லியில் 5 பேரும், லடாக் யூனியன் பிரதேசத்தில் 2 பேரும், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 5 பேரும், தெலங்கானாவில் ஒருவரும், ஜம்மு காஷ்மீர்  யூனியனில் ஒருவரும், பஞ்சாப்பில் ஒருவரும் இந்த வைரசால்  பாதித்துள்ளனர்.

கேரளா, மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், 2 மாநிலங்களிலும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகளும், மத்திய அரசும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், கர்நாடகாவின் கலபுர்கியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முகமது உசைன் சித்திக் என்ற 76 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய 76 வயது முதியவர் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் உயிரிழந்து உள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் முதன் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சகத்தில்  நடக்கும் ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : India ,Corona ,attack , One killed in Corona attack for first time in India
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...