×

செண்பகத்தோப்பு பகுதி மாந்தோப்புகளில் வெள்ளை ஈக்கள் ‘அட்டாக்’ மா விவசாயிகள் பரிதவிப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே உள்ளசெண்பக த்தோப்பு பகுதியில் 100 ஏக்கரில் விவசாயிகள் மா பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதி மாம்பழங்கள் சேலத்திற்கு அடுத்து மிகவும் ருசியாக இருப்பதால் விவசாயிகள் அறுவடை செய்யும் நேரத்தில் மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து கொள்முதல் செய்து  விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். பல நேரங்களில் சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டு வெளிநாடுகளுக்கும் திருவில்லிபுத்தூர் மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள மாமரங்களில் பூத்த பூக்களை வெள்ளை ஈக்கள் கூட்டம், கூட்டமாக  பூக்களை  மொய்த்து உதிர செய்கின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். பொதுவாக மா மரங்களுக்கு   இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே மருந்து அடிப்பார்கள். ஆனால் இந்த ஈக்களை கட்டுப்படுத்துவதற்காகவும், ஈக்களை விரட்டும் வகையிலும் விவசாயிகள் இதுவரை 7 அல்லது 8 முறை மருந்து அடித்தும் எவ்வித பலன் இல்லாத நிலையே உள்ளது.

இதுகுறித்து விவசாயி சமரசம் கூறும்போது, கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக மா விவசாயம் பார்த்து வருகிறேன். ஒன்று அல்லது இரண்டு முறை மருந்து அடித்தாலே  நோய்களிலிருந்து மா மரங்களையும், பூக்களையும் காப்பாற்றி அதிக மகசூல் எடுத்து விடுவோம். ஆனால் இந்த முறை மரம் ஒன்றிற்கு 7 அல்லது 8 முறை மருந்து அடித்தும் இந்த வெள்ளை ஈக்களை எங்களால் கட்டுபடுத்த முடியவில்லை. மரங்களில் பூத்த பூக்கள் அனைத்தும் இந்த வெள்ளை ஈக்களால் உதிர்ந்து விட்டன.  தப்பித்தவறி பிழைத்த பூக்களில் இருந்து வந்த மாவடுக்களை பச்சை நிறத்தில் உள்ள புழுக்கள் கடித்து தின்று விடுகின்றன. வங்கியில் கடன் வாங்கி மா விவசாயத்தை கவனித்து வருகிறோம். ஆனால் வெள்ளை ஈக்கள் மற்றும் பச்சை புழுக்களால் பூக்கள் உதிர்ந்து விளைச்சல் பாதிக்கிறது. இதனால் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலையில் உள்ளோம். இதனால் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என தெரிவித்தார்.

இதுகுறித்து தோட்டக்கலை துறை  அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘வெள்ளை ஈக்கள் அதிக அளவு உள்ளது. இதனால் மா விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் மட்டுமன்றி வத்திராயிருப்பு, ராஜபாளையம், கான்சாபுரம் போன்ற பகுதிகளில் இத்தகைய பாதிப்பு உள்ளது’ என தெரிவித்தார்.

Tags : White Flies ,Flower Farmers in Cenotaph ,Attock , Farmers
× RELATED குமரியில் தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி?