×

அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரத்து அதிகரித்ததால் 15ம் தேதி வரை நெல் கொண்டுவர வேண்டாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நெல் வரத்து அதிகரித்துள்ளதால் வரும் 15ம் தேதி வரை நெல் மூட்டைகளை கொண்டுவர வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு லாலாப்பேட்டை, சோளிங்கர், பொன்னை, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு, விளாப்பாக்கம், திமிரி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மூட்டைகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் சுமார் 3,700 நெல் மூட்டைகள் வந்தன. அதேபோல், நேற்று 3,400 நெல் மூட்டைகள் கொண்டு வந்தனர்.

விற்பனை கூட வளாகத்தில் உள்ள ஒரு நெல் கிடங்கு, 8 பரிவர்த்தனை கூடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இருப்பில் உள்ளது. வளாகம் முழுவதும் நெல் மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை கூடத்திற்கு வெளியில் வாகனங்களில் காத்திருக்கிறது. இந்நிலையில் நெல் மூட்டைகள் வைக்க இடமில்லாததால் நிர்வாகம் சார்பில் இன்று முதல் 14ம் தேதி வரை 4 நாட்களுக்கு நெல் மூட்டைகளை எடுத்து வரவேண்டாம் எனவும், 15ம் தேதி முதல் நெல் மூட்டைகைளை எடுத்துவரலாம் என விற்பனை கூட கண்காணிப்பாளர் பழனி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய 75 கிலோ நெல் மூட்டைகளின் விலை விவரம் பின்வருமாறு: ஏடிடி 36 வகை நெல் குறைந்தபட்ச விலை ரூ.1234க்கும், அதிகபட்ச விலை ரூ.1282க்கும், ஏடிடி 37 குண்டு நெல் வகை குறைந்தபட்ச விலை ரூ.931க்கும், அதிகபட்ச விலை ரூ.1010க்கும், கோ 51 நெல் வகை குறைந்தபட்ச விலை ரூ.1012க்கும், அதிகபட்ச விலை ரூ.1079க்கும், சூப்பர் பொன்னி நெல் வகை குறைந்தபட்ச விலை ரூ.1022க்கும், அதிகபட்ச விலை ரூ.1036க்கும், சோனா நெல் வகை குறைந்தபட்ச விலை ரூ.1259க்கும், அதிகபட்ச விலை ரூ.1464க்கும், நர்மதா வகை நெல் குறைந்த பட்சம் மற்றும் அதிகபட்ச விலை ரூ.1449க்கும், பூமிகா வகை நெல் குறைந்த பட்சம் மற்றும் அதிகபட்ச விலை ரூ.1446க்கும், அமோகம் வகை நெல் குறைந்த பட்சம் மற்றும் அதிகபட்ச விலை என ரூ.1389க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags : Amur Regulatory Warehouse ,Paddy , Paddy
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...