×

வாசிப்பு பழக்கத்தை வளர்த்த ‘நாயகன்’ - இன்று(மார்ச் 11) வே.தில்லைநாயகம் நினைவு தினம்

கல்வியே நமக்கு வாசிப்பு பழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தி தருகிறது. கல்வியறிவை மட்டுமே கொண்டு ஒருவர் வாழ்க்கையில் முழுவளர்ச்சி பெற முடியாது. அதற்கு மற்றொரு வாசிப்பு மிக முக்கியம். அது செய்தித்தாள்களாகவோ அல்லது நூல்களாக கூட இருக்கலாம். வாசிப்பு பழக்கத்தை வளர்க்கவே நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. அப்படி ஒரு பழக்கத்தை பரவலாககியவர்தான் வே.தில்லைநாயகம். நூலகவியலின் தந்தை என அனைவராலும் அழைக்கப்பட்டவர்.
அவரைப்பற்றி அறிவோமா?
   
தேனி மாவட்டம், சின்னமனூரில் 1925, ஜூன் 10ம் தேதி ஆசிரியர் வேலுச்சாமி - அழகம்மை தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தில்லைநாயகம். அங்குள்ள  கருங்கட்டான்குளம் நடுநிலைப்பள்ளியிலும், தொடர்ந்து உத்தமபாளையத்திலும் பள்ளி கல்வியை முடித்தார். பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிஏ படித்தார். பின் சென்னை பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியல் பட்டம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுவர் பட்டம், மதுரை தியாகராசர் கல்லூரியில் கல்வி இளவர் பட்டம், டில்லி பல்கலைக்கழகத்தில் நூலகவியலில் முதுவர் பட்டம் பெற்றார். மேலும், அண்ணாமலைப் பல்கலையில் பிரான்ஸ், ஜெர்மனி மொழிகளையும், மதுரை காமராசர் பல்கலையில் ஜோதிடமும் பயின்றார்.

அப்போது எல்லாம் மாணவர்கள் நூலகங்கள் சென்றே பல்வேறுவிதமான புத்தகங்களை படித்து வந்தனர். அதனால் நூலகத்துறையை உயர்த்த வேண்டுமென விரும்பினார் தில்லைநாயகம். 1949ல் அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்ற இவர், பொதுக்கல்வித்துறை இயக்க முதல் நூலகராக நியமிக்கப்பட்டார். 1962ல் கன்னிமாரா பொது நூலகத்தின் நூலகரானார். பின்னர் 1972ல் தமிழக அரசு பொது நூலகத்துறையின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையின் கீழ் நூலகத்துறையில் செயல்பாடு அற்புதமாக இருந்தது. அபார வளர்ச்சியும் பெற்றது. அனைவரும் படிக்கும் வண்ணம் பல நூல்களை அவர் புதுப்பித்தார். படிக்கும்போது தனக்கு பிடித்த விஷயங்களை விரிவாக எழுதி பாதுகாத்து வைத்திருந்தார். இதைக்கண்ட இவரது நண்பர்கள், இவரை நூல் எழுதுமாறு ஊக்குவித்தனர். இதைத்தொடர்ந்து ‘இந்திய நூலக இயக்கம்’ என்ற நூலை எழுதினார். பல ஆண்டுகளாக அலைந்து திரிந்து, ஆராய்ந்து இவர் எழுதிய இந்த நூல் பலரது பாராட்டை பெற்றது.

நூலகத்துறை இயக்குநர் பதவியை தொடர்ந்து 10 ஆண்டுகள் வகித்தார். அந்த 10 ஆண்டுகளில் அவர், தமிழகமெங்கும் நூலகத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். சுமார் 25 நூல்களையும் எழுதியுள்ளார். எதையும் எடுத்தோம், எழுதினோம் என்று இல்லாமல், யாரும் குறை சொல்லி விடக்கூடாது என்பதற்காக நெடிய ஆராய்ச்சி செய்து எழுதுவதில் கைதேர்ந்தவர். இந்திய நூலகத் துறை முன்னோடியான இரா.அரங்கநாதனின் எழுத்துகளால் பெரிதும் கவரப்பட்டவர். அவரது எழுத்தில் இவரது சாயல் இருக்கும் என தமிழறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார். ‘இந்திய நூலக இயக்கம்’ நூலைப் பாராட்டி உலகப் பல்கலைக்கழகம் 1982ல் வே.தில்லைநாயகத்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. வள்ளல்களின் வரலாறு, நூலக உணர்வு போன்ற நூல்கள் மாநில அளவில் விருதையும், பாராட்டையும் பெற்றன.

இவரது ‘குறிப்பேடு’ என்ற நூல்தான் தமிழில் முதன்முதலாக வெளிவந்த ஆண்டு நூல் ஆகும். ஆங்கிலத்தில் இயர் புக் என்கிறோமே அது. பல்வேறு மொழிகளில், அதாவது, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளத்தில் இவரது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டன. நூலகமே நம் அறிவை வளர்க்கும் என்பதில் இறுதிவரை மிக உறுதியாகவே இருந்தார். வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள், மக்களிடம் வளர்க்க அரும்பாடுபட்டார். பல விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திய வே.தில்லைநாயகம், 2013ம் ஆண்டு, மார்ச் 11ம் தேதி தனது 88வது வயதில் உயிரிழந்தார். வாசிப்பு பழக்கம் இருக்கும் வரை, வே.தில்லைநாயகம் நம் மனதில் என்றென்றும் நாயகனாக வீற்றிருப்பார்.

Tags : Dillanayaka Memorial Day , Dillanayaka Memorial Day
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது