×

பழநி அருகே அடிப்படை வசதியின்றி பழங்குடியினர் அவதி

பழநி: பழநி அருகே கத்தாளம்பாறையில் பழங்குடி மக்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லல்படுவதால் மாவட்ட நிர்வாகம் உதவ முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில், அடர் வனப்பகுதிகளில் குகைகளில் வசித்து வந்த பளியர் இன மலைவாழ் மக்களை வனத்துறையினர் அழைத்து வந்த மலையோர கிராமங்களில் தங்க வைத்துள்ளனர். அதன்படி மண்திட்டு, குதிரையாறு, பொந்துப்புளி, புளியம்பட்டி, கத்தாளம்பாறை, குட்டிக்கரடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பளியர் இன மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. மேலும், பள்ளி, ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழநி அருகே கத்தாளம்பாறையில் வசித்து வரும் பளியர் இன மக்கள் போதிய அடிப்படை வசதிகளின்றி அல்லல்பட்டு வருகின்றனர். இவர்களின் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு செல்ல உரிய வழி தெரியாமல் பரிதவித்து வருகின்றனர். இதனால் வேலை இல்லாமல், கழிவறை இல்லாமல், காட்டு விலங்குகளுக்கு பயந்து இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் தங்கிக்கொண்டு உயிரை பணயம் வைத்து வாழ்ந்து கொண்டிருகின்றனர். போதிய வாக்கு வங்கி இல்லாததால் அரசியல் கட்சிகளும் இவர்களது பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதில் அக்கறை கொள்வதில்லை. இதுகுறித்து கத்தாளம்பாறையைச் சேர்ந்த நாகம்மா கூறியதாவது: எங்கள் பகுதியில் சுமார் 12 குடும்பங்கள் வசித்து வருகிறோம். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு வீடு கட்டித் தரப்பட்டது. ஆனால், உறுதியாக கட்டித்தராததால் மேற்கூரைகள் காரைகள் பெயர்ந்து எப்போது இடிந்து விழும் என்று தெரியாத நிலையில் உள்ளது. மழை பெய்தால் வீட்டிற்குள் தண்ணீர் ஒழுகும். கழிப்பறை வசதி இல்லை. இதனால் இரவில் காட்டிற்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளுக்கு பயந்து வெளிப்புறத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

கழிப்பறை இல்லாததால் பெண்கள், குழந்தைகள் கடும் அவஸ்தைப் படுகின்றனர். ஊருக்கு ஒதுக்குபுறத்தில் மலையடிவாரத்தில் எங்களுக்கு குடியிருப்பு கட்டித் தரப்பட்டுள்ளது. ஆனால், சாலை வசதி என்பது அறவே இல்லை. மழை காலத்தில் ஊருக்குள் நீச்சல் அடித்துதான் செல்ல வேண்டும். சாலை சகதிக்காடாய் மாறி விடும். எனவே, மாவட்ட நிர்வாகம் எங்களது குடியிருப்புகள் மற்றும் சாலைகளை சீரமைத்துத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கத்தாளம்பாறையைச் சேர்ந்த செந்தில் கூறியதாவது: வனப்பகுதியை ஒட்டி வனத்துறையால் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலி செயலிழந்து விட்டது. அகழி தூர்ந்துவிட்டது. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் எங்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. வீடுகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அனைவரும் வீட்டினுள் படுக்க முடிவதில்லை. வெளியே படுக்கலாமென்றால் விலங்குகள் நடமாட்டம் உள்ளது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதனால் அனுதினமும் இரவு நேரங்களில் மரண பயத்துடனேயே படுத்துறங்க வேண்டி உள்ளது. மேலும், அடுப்பு வைக்கக் கூட முடியாததால், வெட்ட வெளியில்தான் அடுப்புக் கூட்டி சமைத்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் எங்களது குறைகளை தீர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Palani , Palani
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது