×

ஆழியாரிலிருந்து இடம்பெயர்ந்த ஒற்றை யானை கண்காணிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த நவமலை மற்றும் ஆழியார் வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருகிறது. இதில் நவமலையில் உள்ள மலைவாழ் குடியிருப்பு பகுதி மட்டுமின்றி, மின்வாரிய அலுவலர் வசிக்கும் குடியிருப்புகளிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதில் சுமார் 15 வயது மதிக்கத்tதக்க காட்டு யானை ஒன்று கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆழியாரிலிருந்து வால்பாறை மலைப்பாதைக்கு செல்லும் ரோட்டில் உலா வந்துள்ளது.

மேலும், அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து தென்னை, வாழைகளை துவம்சம் செய்ததுடன் வன சோதனைச்சாவடி தடுப்பு கம்பிகளையும் சேதப்படுத்தியுள்ளது. மதம் பிடித்ததுபோல் உலா வந்த அந்த காட்டு யானையை வனத்துறையினர் வனத்திற்குள் விரட்டியுள்ளனர். ஆனால் தினமும் மாலை நேரத்தில் மீண்டும் ரோட்டிற்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஆழியார் மற்றும் நவமலை பகுதியில் சுற்றித்திரிந்த யானையால் வால்பாறை ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலரும் பீதியடைந்தனர். இதையடுத்து அந்த யானையை விரட்டும் பணியில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் களம் இறங்கினர். கடந்த சில நாட்களாக ஆழியார் பகுதியிலிருந்து வால்பாறை ரோடு வழியாக இடம்பெயர்ந்தது.

தற்போது அந்த யானை, மாங்கரை பீட் பகுதியான பெரியசோலை எனும் இடத்துக்கு இடம்பெயர்ந்து அங்ேகயே முகாமிட்டுள்ளது. அந்த யானையின் ஆக்ரோஷம் சற்று குறைந்துள்ளதால் வனத்தில் கிடைக்கும் உணவை உண்டு வருகிறது. இருப்பினும் அந்த ஒற்றை யானை சுற்றுலா பகுதிக்கோ அல்லது தோட்ட பகுதிக்கோ மீண்டும் வருவதை தவிர்க்க தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Elephant
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...