×

கும்பகோணம்- தஞ்சை சாலையில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

கும்பகோணம்: கும்பகோணம்- தஞ்சை சாலையில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணம்- தஞ்சை மற்றும் கும்பகோணம்- நீலத்தநல்லூர் சாலைகளில் 50 திருப்பங்கள் உள்ளன. மேலும் சாலை குறுகலாக உள்ளது. இந்த சாலையோரங்களில் குடியிருப்புகள், பல ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. மேலும் சாலையும் தரமாக இல்லாமல் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சில மணி நேரத்தில் கடக்கும் தூரத்தை பல மணி நேரத்தில் கடக்க வேண்டிய நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் இருந்து அதிக பாரங்களை உயரமாக கட்டி செல்லும் லாரிகள் மற்றும் வைக்கோல் கட்டுகளை அளவுக்கு அதிகமாக ஏற்றி கொண்டு லாரிகளும் சென்று வருகின்றன. வைக்கோல் கட்டுகள் ஏற்றி செல்லும்போது சாலையின் பக்கவாட்டில் செல்பவர்களின் மேல் உரசுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் அதிக பாரத்தை ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள், சாலையோர மரக்கிளைகளில் மோதுகிறது. அப்போது மரக்கிளைகள் உடைந்து கீழே விழுகிறது.

கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றின் நீலத்தல்லூர் மணல் குவாரியில் இருந்து கோவை, கரூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கும்பகோணம், தஞ்சை வழியாக மணல் ஏற்றி கொண்டு 100க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகிறது. இந்த லாரிகள் அதிக வேகத்துடன் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் மணல் ஏற்றி செல்லும் பெரும்பாலான லாரிகளில் தார்ப்பாயால் மூடுவதில்லை. இதனால் காற்றில் மணல் பறந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் படுவதால் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இதுபோல் தினம்தோறும் ஏராளமான லாரிகள் சென்று வருவதால் கும்பகோணம்- தஞ்சை மற்றும் கும்பகோணம்- நீலத்தநல்லூர் சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே கும்பகோணம்- தஞ்சை சாலையில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக உயரத்துடன் வைக்கோல் லாரி செல்லும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வேகமாக செல்லும் லாரிகள் மற்றும் தார்பாய் போட்டு மூடாமல் மணல் ஏற்றி செல்லும் லாரிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Accidents ,road Accident ,Kumbakonam-Tanjai , Accident
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...