×

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: சென்னை துறைமுகத்துக்குள் வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் நுழைய மார்ச் 31 வரை தடை!

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து சென்னை துறைமுகத்துற்குள் மார்ச் 31 வரை வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கப்பல்கள் அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தோற்று என்பது உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழப்புகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் கொரோனா நோய் என்பது பரவ தொடங்கியிருக்கக்கூடிய நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்டோர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் ஒருவருக்கு அது தொடர்பான அறிகுறி இருப்பதாக தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் கொரோனா நோய் மேற்கொண்டு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாகத்தான் சென்னை துறைமுகத்துக்குள் வரக்கூடிய பயணிகள் கப்பல்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை உள்ளே நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை துறைமுகக்கழக போக்குவரத்து பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கொரானா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள் கப்பல்கள், இந்திய துறைமுகங்களில் நுழைய மார்ச் மாதம் 31ம் தேதி வரை தடை விதிப்பதென்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் எந்த வெளிநாட்டில் இருந்து பயணிகள் கப்பல் வந்தாலும் சென்னை துறைமுகத்தில் 31ம் தேதி வரை நுழைய அனுமதியளிக்கப்பட மாட்டாது எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, விமானம் வழியாக இந்தியா வருபவர்களுக்கும் ஒருவிதமான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ரயில் போன்ற இதர பொது போக்குவரத்து வழியாக வருபவர்கள் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.


Tags : port ,Chennai , Corona, Chennai port, overseas ships, March 31, ban
× RELATED தமிழக பகுதியில் அத்துமீறி...