காவு வாங்க துடிக்கும் கர்த்தநாதபுரம் நடைபாலம்: பாமணியாறு குறுக்கே 56 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது

மன்னார்குடி: மன்னார்குடியில் பாமணியாற்றின் குறுக்கே 56 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட கர்த்தநாதபுரம் நடைபாலம் நகராட்சி நிர்வாகத்தின் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் முற்றிலும் சேதமடைந்து மரண பாலமாக மாறி உள்ள நிலையில், இந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டுமென வலியுறுத்தி நாளை மறுநாள் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 4ம் வார்டு பிருந்தாவனம் நக ரையும் 5ம் வார்டு கர்த்தநாதபுரத்தையும் இணைக்கும் முக்கியமான பாலமாக விளங்குவது பாமணி ஆற்றின் மேல் 1962ம் ஆண்டு கட்டப்பட்ட கர்த்த நாதபுரம் நடைபாலம். இது பாமணியாற்றின் குறுக்கே 3 அடி அகலத்தில் 310 அடி நீளத்தில் கட்டப் பட்டுள்ளது. பாலத்தை நகராட்சி நிர்வாகமும், பாமணியாற்றை பொதுப்பணித்துறையும் பராமரித்து வந்தன. கர்த்தநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 5 க்கு மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மன்னார்குடி நகரத்திற்குள் வருவதற்கு இந்த பாலத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்த்தநாதபுரம் பாலத்தின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. பாலத்தை தாங்கி பிடித்திருக்கும் இரும்பு ராடார்கள் முற்றிலும் துரு பிடித்து கிடக்கிறது. பாலத்தின் மேலே இரு பங்கங்களிலும் இருந்த கைப்பிடி இரும்பு பைப்புகள் எல்லாம் துருப்பிடித்து பெரும்பாலும் சேதமடைந்து விட்டது.

இதே நிலை நீடித்தால் மிக விரைவில் இந்த பாலம் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் மேல் நடக்கும் பொது மக்களின் உயிரு க்கு எந்நேரமும் ஆபத்து ஏற்படும் சூழலே தற்போது நிலவுகிறது. நகரத்தின் மையப்பகுதியை இணைக்கும் இந்த நடைபாலம் அபாயகரமான நிலையில் மரண பாலமாக மாறி உள்ளது. ஒவ்வொரு முறை தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களிடம் பாலம் குறித்து இப்பகுதி மக்கள் கோரிக்கைகள் வைப்பதும் வாடிக்கையாகவே இருந்து வந்துள்ளது. சேதமடைந்துள்ள இந்த பாலத்தை முற்றிலும் இடித்து விட்டு புதியதாக ஒரு பாலம் கட்டப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை மட்டும் அல்லாமல் நீண்ட வருட கனவாகவே உள்ளது.

சாலை மறியல் போராட்டம்

இந்நிலையில், கர்த்தநாதபுரம் நடைபாலத்தை முற்றிலும் இடித்து அகற்றி புதிதாக கட்டி தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு, அனைத் திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் நாளை மறுநாள் (மார்ச் 13) மன்னார்குடி மேலப்பாலம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கலைச்செல்வன் கூறுகையில், கடந்தாண்டு திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழா மேடையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கர்த்தநாதபுரம் பாலம் ரூ 1.25 கோடி மதிப்பில் புதிதாக கட்டி தரப்படும் என்றார். முதல்வரின் அறிவிப்பையொட்டி புதிய பாலம் கட்டுவதற்கு ஏதுவாக அவசர அவசரமாக மண் பரிசோதனைகள் எடுக்கப் பட்டன. ஆனால் பாலம் கட்டும் பணிகள் மட்டும் இதுவரை துவக்கப் படவில்லை. எனவே மாவட்ட நிர் வாகம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியுடன் கூடுதலாக நிதியை ஒதுக்கி தற்போது நிலவி வரும் கோடை காலத் தை பயன் படுத்தி புதிய பாலத்தை கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் சிவ ரஞ்சித் கூறுகையில், ஒவ்வொரு முறை தேர்தல் நேரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் புதிய பாலம் குறித்து இப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கைகள் வைப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. முதல்வரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளிவந்த பிறகும் கடந்த ஓராண்டாக பணிகள் துவக்கப்படாததன் காரணம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளிப் படையாக அறிவிக்க வேண்டும்.

சேதமடைந்துள்ள இந்த பாலத்தை முற்றிலும் இடித்து விட்டு புதியதாக ஒரு பாலம் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுநாள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என கூறினார்.

Related Stories:

>