×

குமரியில் குத்தகை விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டை நெல் ரூ.1622க்கு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் உரிய ஆவணம் இல்லாததால், அவர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. மாவட்டத்தில் தற்போது கும்பபூ அறுவடை நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழையால் ஒரு சில இடங்களில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தேரூர், தாழக்குடி பத்து மற்றும் அனந்தனார் சானல் பாசன வசதிபெறும் வயல்களில் அறுவடை நடக்கவில்லை. வயல்பகுதி காய்ந்த பிறகு அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் 60 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி புத்தளம், செண்பகராமன்புதூர், திட்டுவிளை, தேரூர், கிருஷ்ணன்கோவில், திங்கள்நகர் ஆகிய இடங்களில் நெல்கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்படும் வயல்பகுதிகளுக்கு சென்று வியாபாரிகள், விவசாயிகளிடம் கோட்டை(87 கிலோ)க்கு ரூ.1150 கொடுத்து கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் நெல்கொள்முதல் நிலையத்தில் ஒரு கோட்டை ரூ.1622.55க்கு கொள்முதல் செய்யபடுகிறது. நெல்கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நேரடியாக நெல்லை கொடுக்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையத்தில் கொடுக்கப்படும் நெல்லுக்கு  விவசாயிகள் வங்கி கணக்கில் 5 முதல் 7 நாட்களில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் குத்தகை நிலத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாமல் உள்ளனர். இதனால் குத்தகை விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் அவர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். நெல்கொள்முதல் நிலையங்களுக்கு நெல்கொண்டு செல்லும் போது விவசாயிகள் தங்கள் விளைநிலத்தின் ‘அடங்கல்’ சான்றிதழை காண்பித்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நிலத்தை குத்தகை எடுத்து நெல்சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு ‘அடங்கல்’ சான்றிதழ் கிடைப்பது இல்லை. இதனால் அவர்கள் விளைவித்த நெல் அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவில்லை.

குமரி மாவட்டத்தில் குத்தகை நிலம் எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள், நில உரிமையாளரிடம் இருந்து நிலத்தை வாய்மொழி குத்தகை எடுத்து பயிரிட்டு வருகின்றனர். அவர்கள் குத்தகை எடுத்து பயிரிடுவதற்கான எந்த ஆவணங்களும் குத்தகைதாரரிடம் இருப்பது இல்லை. இதனால் அவர்கள் விளைவித்த நெல், நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படாமல் நிராகரிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் விவசாயிகள் அனைவருக்கும் உழவர் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை வருவாய் துறை விசாரணை நடத்தி வழங்கியுள்ளது. உழவர் அட்டை உள்ள விவசாயி நெல்கொள்முதல் நிலையத்திற்கு நெல் கொண்டு வரும்போது, அரசு நிர்ணயித்துள்ள விலையில் அதனை கொள்முதல் செய்தால் அவர்களும் லாபம் அடைவார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அனைத்து விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.

சான்றிதழ் இல்லாததால் தவிப்பு

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு கிலோவிற்கு ரூ.18 வீதம் வழங்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு கோட்டை நெல் ரூ.1150க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. நெல்கொள்முதல் நிலையத்தில் ஒரு கோட்டைக்கு ரூ.472 அதிகமாக கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் புத்தளம், திட்டுவிளை ஆகிய நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் இருப்பு வைப்பதற்கு எந்த வசதியும் இல்லை. விவசாயிகள் நெல்கொண்டு செல்லும்போது மழை பெய்தால், அனைத்தும் மழையில் நனையும் நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த இரு நெல்கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் அதிக அளவு நெல் கொண்டுவந்தாலும், மழையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குத்தகை விவசாயிகளின் நெல்லை, நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வது இல்லை. அவர்களது பெயரில் நிலத்திற்கான அடங்கல் சான்றிதழ் இல்லாததால் இந்த நிலை ஏற்படுகிறது. இதனால் உழவர் அட்டையின் நகல் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியிடம், இந்த நிலத்தில், குத்தகை விவசாயி பயிர்செய்து இருப்பது உண்மைதான் என சான்றிதழ் பெற்று வந்தால், நெல்கொள் முதல் செய்யலாம் என்ற உத்தரவாதத்தை மாவட்ட நிர்வாகம் அளிக்க வேண்டும். இதனால் குத்தகை விவசாயிகளுக்கு நெல்லுக்கு போதிய விலை கிடைக்கும். இதனை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தவேண்டும். இதனால் சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நெல்லுக்கு கிடைக்கும் விலை, குத்தகை விவசாயிகளுக்கும் கிடைக்கும் என்றார்.

Tags : Lease Farmers ,Kumari ,Paddy , Paddy
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து