×

மயிலாடுதுறை தரங்கையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சாலையில் ஏற்பட்ட மெகா பள்ளம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை-தரங்கை சாலையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் மெத்தனத்தால் தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடந்து வருகிறது. எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் 2007ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவரும் பாதாள சாக்கடைக்கான இணைப்பை 15 ஆயிரத்திற்கும் மேல் பெற்று மயிலாடுதுறை மக்கள் தொடர்ந்து தொல்லையை அனுபவித்து வருகின்றனர். அதுவும் கடந்த 2 ஆண்டுகளாக நகரமே துர்நாற்றம் மற்றும் சாக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறி காணப்படுகிறது. பாதாள சாக்கடைக்கான கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவது சகஜமாகிவிட்டது. மயிலாடுதுறை தரங்கை சாலையில் சாலை உள்வாங்குவதும் அதை சரிசெய்வதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. 7 பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையங்களிலிருந்து அனுப்பப்படும் சாக்கடை நீரானது ஒன்று சேர்ந்து மயிலாடுதுறை தரங்கை சாலை வழியாகத்தான் 8ம் எண் பம்பிங் ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்து மீண்டும் பம்பிங் செய்யப்பட்டு ஆறுபாதி கிராமத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.

மயிலாடுதுறை தரங்கைச்சாலையில் சாலைக்கடியில் போடப்பட்டுள்ள சாக்கடை குழாய்கள் பெரிய அளவில் உள்ளன. சரியான பைப்லைன் போடப்படாததால் குழாய்கள் செரித்து ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் இதுவரை 10 இடங்களில் உடைப்புஏற்பட்டு அவைகள் பல லட்சம் செலவுசெய்து சரிசெய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலையில் கொத்தத்தெரு சுமைதாங்கி பேருந்து நிறுத்ததின் முன்பு சாலை உள்வாங்கி மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த உடைப்பை கேள்வி பட்டதும் பதறி போனது மயிலாடுதுறை போக்குவரத்து காவல்துறைதான். அந்த பாதையில் கனரக வாகனங்கள் செல்லாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். நான்கு சக்கர வாகனம் மற்றும் பைக்குகள் மட்டுமே அந்த வழியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதகாலமாக மயிலாடுதுறை மக்கள் அனுபவித்த அதே கொடுமையை மீண்டும் அனுபவிக்க தயாராகி விட்டனர். பாதாள சாக்கடை குழாய் உடைந்து அவற்றை சரிசெய்வதற்கு பல லட்சம் செலவு செய்ய வேண்டும் அதற்கான தொகையை நகராட்சி வழங்கும் சாலை உடைப்பை சரிசெய்ய நடைபெறும் பணிக்கு வழங்கப்படும். ரூ.2 லட்சத்திலிருந்து வேலைக்கு ஏற்ப ரூ.7 லட்சமும் அதற்கு மேலும் செலவாகும் தொகைக்கு ஏற்றாற்போல் பல மட்டங்களில் அதிகாரிகளுக்கு கமிஷன் தொகை வெட்ட வேண்டும். தற்பொழுதைய கணக்குப்படி 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது, அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும். நாகை மாவட்ட கலெக்டர் தனி கமிட்டி அமைத்து மயிலாடுதுறை பாதாள சாக்கடை செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ground ,Mayiladuthurai , Pipe breakage
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...