×

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிப்பு: ஸ்பெயின், ஜெர்மனி , பிரான்ஸ் நாடுகளுக்கும் விசா மறுப்பு...மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு எதிரொலியாக மேலும் 3 நாடுகளுக்கு இந்தியா விசா கட்டுப்பாடு விதித்துள்ளது. சீனாவில் வுகான் நகரில் உருவான `கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ்,  இந்தியா உள்பட 104க்கும் அதிகமான  நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே இந்த வைரஸ் தாக்குலுக்கு இதுவரை 3,136 பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும், சீன அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் பலி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 17  பேர் மட்டுமே புதிதாக உயிரிழந்தனர்.  உலகம் முழுவதும் இந்த வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 4011 ஆக அதிகரித்துள்ளது.

1.10 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆக இருந்தது. இது நேற்று ஒரே நாளில் 14 அதிகரித்து 61 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 8 பேருக்கும், மகாராஷ்டிராவில் 3 பேருக்கும், கர்நாடகாவில் 3 பேருக்கும் நேற்று ஒரே நாளில் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் ஒருவரும்,  கேரளாவில் 14 பேரும், கர்நாடகாவில் 4 பேரும், உத்தர பிரதேசத்தில் 9 பேரும், டெல்லியில் 5 பேரும், லடாக் யூனியன் பிரதேசத்தில் 2 பேரும், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 5 பேரும், தெலங்கானாவில் ஒருவரும், ஜம்மு காஷ்மீர்  யூனியனில் ஒருவரும், பஞ்சாப்பில் ஒருவரும் இந்த வைரசால் பாதித்துள்ளனர்.

இது தவிர, இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 16 பயணிகள், சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் பாதித்துள்ளனர். கேரளா, மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், 2 மாநிலங்களிலும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.  கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகளும், மத்திய அரசும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், இதுவரை யாரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இறக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே,  இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. இவர்களில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியை சேர்ந்தவர்கள் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு  செயலாளர் சஞ்சீவா குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இத்தாலி, ஈரான், கொரியா, ஜப்பான் மற்றும் சீனாவுக்கு விசா மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்பெயின், ஜெர்மனி , பிரான்ஸ் நாடுகளுக்கும் விசா மறுக்கப்பட்டுள்ளதாக  கூறியுள்ளார். பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Visa ,France ,India ,Corona ,Germany ,Spain ,government , Corona prevalence increase in India: Visa refusal for Spain, Germany and France
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...