×

ஈரோட்டில் பரபரப்பு சம்பவம் வடமாநிலத்தவர் கடைக்கு பூட்டு: தமிழகத்தை விட்டு வெளியேறு என பேனர்

ஈரோடு:  ஈரோடு மாநகரில் கொங்காலம்மன் கோயில் வீதி, ஜின்னா வீதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்தவர்கள் பல வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் தமிழர்களும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கொங்காலம்மன் கோயில் வீதியில் செயல்பட்டு வரும் பவன் ஸ்டேஷனரீஸ் என்ற கடையிலும், ஜின்னா வீதியில் உள்ள கிருஷ்ணா மெட்டல் கடைகள் உட்பட மூன்று கடைகளின் முன்பும் பிளக்ஸ் பேனர் தொங்க விடப்பட்டு இருந்தைத உரிமையாளர்கள் நேற்று காலை கண்டனர். தமிழில் எழுதப்பட்டு இருந்ததால் என்ன என்று புரியாமல் அவற்றை அப்புறப்படுத்தி விட்டு, கடையை திறக்க முயன்றனர்.  ஆனால், கடையில் புதிதாக பூட்டுபோடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து  பிளக்ஸ் பேனர்களை எடுத்து பார்த்து, விவரத்தை கடை உரிமையாளர்களிடம் கூறினர். அதன்பிறகே வடமாநிலத்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூட்டு போடும் போராட்டம் நடந்து இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

கடையில் தொங்க விடப்பட்ட பிளக்ஸ் பேனரில், ‘‘தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வெளிமாநில மார்வாடிகளின் வணிக நிறுவனங்களை பூட்டுவோம். தமிழகத்தில் இருந்து விரட்டுவோம். தமிழக அரசே, தமிழக அரசே வெளியேற்று. வந்து குவியும் வடஇந்தியர்களை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்று. மார்வாடியே வெளியேறு. வெளியேற  மறுத்தால் புரட்சி வெடிக்கும்’’ என்ற வாசகத்துடன் தமிழ் தேசிய கட்சி-தமிழர் நாடு என்று அச்சடிக்கப்பட்டு இருந்தது.  ஹோலி பண்டிகையின்போது, இச்சம்பவம் நடந்திருப்பதால் வட மாநில உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், `தமிழ் தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் பிளக்ஸ் பேனரில் இருந்தாலும், இதை செய்தவர்கள் யார் என தெரியவில்லை. மேலும், கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Tags : Vandalism incident ,Erode ,excitement incident ,Tamil Nadu ,North ,Vatamanilattavar , Erode, Northlander, Lock Shop, Tamil Nadu
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...