தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு தடை

* தனி அதிகாரி செயல்படலாம் * ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு, ஜூன் 23ம் தேதி தேர்தல் நடந்தது.இந்த தேர்தலில், சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கியது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்க மறுக்கப்பட்டது தொடர்பாகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.  நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். இவர் மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை  தனி அதிகாரி  கவனிப்பார் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு  தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில், நடிகர் சங்கத்திற்கு தேர்தலை நடத்தி முடிக்க ரூ.35 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.  தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் பல மாதங்களாக வாக்குகள்  எண்ணப்படவில்லை.இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் என்று வாதிடப்பட்டது.  இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும். உறுப்பினர்களை சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும்.

தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று  தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதே வேளையில்  நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம். இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக ஏப்ரல் 8ம் தேதிக்குள் தமிழக அரசு பதில்தர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

Related Stories:

>