×

அமலாக்கத்துறை பட்டியல் எடுக்கிறது யெஸ் வங்கியில் பணத்தை அள்ளியவர்கள் யார் யார்?: ராணா சொத்துக்களையும் துருவத்துவங்கி உள்ளது

புதுடெல்லி: வாராக்கடன் சுமையால் முடங்கிப்போன யெஸ் வங்கியில் பல கோடிகளை கடனாக பெற்று திரும்ப கட்டாமல் ஏமாற்றிய தொழிலதிபர்கள் மற்றும் பெரிய  நிறுவனங்கள் பட்டியலை அமலாக்கத்துறை தயாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட வங்கியின் தலைவர் ராணா கபூரின் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றியும் துருவ  ஆரம்பித்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: யெஸ் வங்கி தலைவர் ராணா பல ஆயிரம் கோடிகளை பல தொழிலதிபர்கள், நிறுவனங்களுக்கு கடனாக அள்ளி விட்டுள்ளார்.  திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (டிஎச்எப்எல்) நிறுவனத்திற்கு கொடுத்த கடன் தவிர வேறு எந்தெந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டுள்ளது? அந்த கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ரானா கபூரின் குடும்பத்தினர் அந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு தொகையை லஞ்சமாகப் பெற்றனர் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

 டிஎச்எப்எல் நிறுவனத்திற்கு₹4,000 கோடி வரையில் கடன் கொடுத்துள்ளார் ராணா.  இந்த கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக கபூரின் மனைவி, 3 மகள்கள் பங்குதாரர்களாக இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு டிஎச்எப்எல் நிறுவனம் ₹600 கோடி கடன் கொடுத்துள்ளது. இது குறித்தும் விசாரணை நடக்கிறது. இதற்கிடையில் யெஸ் வங்கி நிதி மோசடியில் தொடர்புடைய 7 பேருக்கு லுக் அவுட் சுற்றறிக்கை நோட்டீஸை சிபிஐ வழங்கியுள்ளது.யெஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி ராவ்நீத் கில்லை மும்பையில் உள்ள அலுவலகத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்களன்று நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் வாங்கி குவித்துள்ள சொத்துகள் பற்றிய விவரத்தை கில்லிடம் விசாரித்தனர். டெல்லி பகுதியில் கபூர் வங்கியுள்ள ₹380 கோடி மேன்சன் குறித்தும் விசாரித்துள்ளனர். டெல்லி அம்ரிதா ஷெர்கில் மார்க் பகுதியில் ராணா பெரிய பங்களா வாங்கியுள்ளார். அதுபோல் மும்பையிலும் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளார். இதுவும் விசாரணை வலையத்திற்குள் வந்துள்ளது. முறைகேடாக சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாயை கபூரின் பினாமி நிறுவனங்கள் பலவற்றில் முதலீடு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதுபோன்று ₹2,000 கோடி வரையில் முதலீடு செய்துள்ளனர். அதேபோல், 4,500 கோடி பணப் பரிமாற்றம் நடந்துள்ளது குறித்தும் விசாரித்துள்ளனர்.

ஐஎம்பிஎஸ், என்இஎப்டி பண பரிவர்த்தனை வசதி
யெஸ் வங்கி முடங்கியதால் இதனுடன் தொடர்புடைய போன் பே நிறுவனம் தனது பண பரிமாற்றத்தை செயல்படுத்த முடியாமல் ஒரு நாள் முழுவதும் முடங்கியது. இந்த பிரச்னை ஒரே நாளில் தீர்க்கப்பட்டுவிட்டது. தற்போது யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஐஎம்பிஎஸ், என்இஎப்டி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை வங்கி சரி செய்துள்ளது. யெஸ் வங்கி கிரடிட் கார்டு, மற்ற வங்கிகளின் கடன் ஆகியவற்றுக்கான பணத்தை வங்கியின் கணக்கு மூலம் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கி நேற்று காலை தனது டிவிட்டர் பதிவில் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அளிக்கப்பட்டுள்ள வங்கி சேவைகள் குறித்தும் விரிவாக பதிவிட்டுள்ளது.

Tags : Enforcement department ,Yes Bank , Enforcement ,Department, Yes Bank
× RELATED பெண்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி...