×

ரஞ்சி கோப்பை பைனல் சவுராஷ்டிரா ரன் குவிப்பு: வாசவதா 106

ராஜ்கோட்: பெங்கால் அணியுடனான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 384 ரன் எடுத்துள்ளது.சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்திருந்தது (80.5 ஓவர்). தேசாய் 38, அவி பரோட், விஷ்வராஜ் ஜடேஜா தலா 54 ரன் விளாசினர். ஷெல்டன்  ஜாக்சன் 14 ரன், சகாரியா 4 ரன்னில்  பெவிலியன் திரும்பினர். செதேஷ்வர் புஜாரா 5 ரன் எடுத்த நிலையில் உடல்நிலை பாதிப்பால் ஓய்வு பெற்றார் (ரிடயர்டு ஹர்ட்). அர்பித் வாசவதா 29 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில், சவுராஷ்டிரா அணி 2ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்தது. வாசவதாவுடன் இணைந்த புஜாரா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, சவுராஷ்டிரா ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய வாசவதா சதம் அடிக்க, மறுமுனையில் புஜாரா அரை சதம் விளாசினார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 142 ரன் சேர்த்தனர்.
வாசவதா 106 ரன் (287 பந்து, 11 பவுண்டரி), புஜாரா 66 ரன் (237 பந்து, 5 பவுண்டரி) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர். பிரேரக் மன்கட் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 384 ரன் எடுத்துள்ளது (160 ஓவர்). சிராக் ஜனி, தர்மேந்திரசிங் ஜடேஜா தலா 13 ரன்னுடன் களத்தில் உள்ளனர். பெங்கால் பந்துவீச்சில் ஆகாஷ்தீப் 3, முகேஷ் குமார், ஷாபாஸ் அகமது தலா 2, இஷான் போரெல் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது. சவுராஷ்டிரா அணி நேற்று மிக நிதானமாக விளையாடி 79.1 ஓவரில் 178 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

நடுவர் காயம்: இந்த போட்டியின்போது பெங்கால் பீல்டர் எறிந்த பந்து கள நடுவர் ஷம்சுதீன் வயிற்றில் பலமாகத் தாக்கியது. இதனால் களத்தில் இருந்து வெளியேறிய அவர்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, மற்றொரு கள நடுவரான அனந்தபத்மநாபன் இரு முனைகளிலும் மாறி மாறி பணியாற்றினார். உள்ளூரை சேர்ந்த பியுஷ் கக்கர் ஸ்கொயர் லெக் நடுவராக செயல்பட்டார். ஷம்சுதீனுக்கு பதிலாக மும்பையில் இருந்து யஷ்வந்த் பார்டே அவசரமாக ராஜ்கோட் விரைந்துள்ளார். அவர் இன்று அனந்தபத்மநாபனுடன் இணைந்து கள நடுவராக செயல்படுவார் என்று பிசிசிசி அறிவித்துள்ளது.

Tags : Ranchi Cup Final ,Saurashtra Run Accumulation: Vasavada 106 ,Saurashtra Run Accumulation ,Ranji Cup Final , Ranji Cup ,Final, Saurashtra Run , Vasavada 106
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ