×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க வழிமுறைகள் வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல் கடந்த 6ம் தேதி வெளியிட்டது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை எப்படி தயார் செய்வது தொடர்பான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படவேண்டும்.

அதன் முதல் பகுதியில் “தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் - 2020” என்று குறிப்பிட வேண்டும். அதில் மாவட்டத்தின் பெயர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் பெயர், வார்டு எண், பாகம் எண், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் குறியீட்டு எண், வாக்குச்சாவடியின் எண், வாக்குச்சாவடியின் பெயர், வாக்குச்சாவடியின் வகை, சம்பந்தப்பட்ட வார்டில் அடங்கியுள்ள தெருக்களின் விவரம், தொடங்கும் வரிசை எண், முடியும் வரிசை எண், வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற வேண்டும். இதை தொடர்ந்து வாக்குச்சாவடியின் பெயர் மற்றும் முகவரி, கட்டிடத்தின் முகப்பு தோற்றம், வாக்குச்சாவடியின் முகப்பு தோற்றம், தரை வரைபடம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். இதற்கு அடுத்தபடியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை இணைக்க வேண்டும்.

அதில் பெயர், புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண், தந்தை அல்லது கணவர் பெயர், வீட்டு எண், வயது, பாலினம் ஆகியவை இடம்பெற வேண்டும். ஒரு பக்கத்தில் 30 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும்.இறுதியாக சட்டமன்ற தொகுதிக்கான 2020 வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் யாரும் இந்த வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்று வாக்காளர் பதிவு அலுவலர் சான்று அளிக்க வேண்டும். தேர்தல் மற்றும் அலுவலக பயன்பாடு, பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஒவ்வொரு வாக்களார் பட்டியலையும் 100 பிரதிகள் படியெடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 20ம் தேதி  வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு மே மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* 5 மாவட்ட தேர்தல் அதிகாரிகள்
புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிஞ்சி, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Municipal and Local Elections, Voter List, State Election Commission
× RELATED கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வழிமுறைகளை வெளியிட்டது ஐசிசி