×

இனி ரோட்டில் மட்டுமல்ல காரில் ஜிவ்வென்று வானத்திலும் பறக்கலாம்: குஜராத்தில் வருகிறது பறக்கும் கார் ஆலை

அகமதாபாத்: பறக்கும் காரை தயாரிக்கும் தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பால்-வி என்ற நிறுவனத்தில் வானத்தில் 180 கி.மீ. வேகத்தில் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது. இந்த காரை சாலையிலும், தேவைப்படும்போது, அருகில் உள்ள விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து பறக்கவும் செய்யலாம். இந்த நிறுவனத்தின் காருக்கு பெரிய அளவில் வரவேற்பு உருவாகி உள்ளது. இந்நிலையில், வளர்ந்து வரும் நாடுகளில் பெரிய அளவில் சந்தை வாய்ப்பு கொண்ட இந்தியாவில்தான் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தங்களுடைய கார் தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கி வருகின்றன. மேலும், பல நிறுவனங்கள், ஆலையை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதேபோல், பால்-வி (பெர்ஷனல் ஏர் லேண்ட் வேகிள்) நிறுவனமும் இந்தியாவில் பறக்கும் கார் தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்க முடிவு செய்தது.

இதற்கான ஒப்பந்தம், குஜராத் முதன்மை செயலாளர் எம்.கே.தாஸ் மற்றும் பால்-வி நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக வளர்ச்சி பிரிவின் துணை தலைவர் கார்லோ மாஸ்பொம்மல் ஆகியோர் முன் கையெழுத்தானது. இதன்படி குஜராத்தில் இதன் ெதாழிற்சாலை அமைகிறது. அடுத்த ஆண்டில் இருந்து இந்நிறுவனம் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டு உள்ளது.  இதுபற்றி அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘‘கார் தொழிற்சாலையை நிறுவ தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெறுவதற்கு குஜராத் அரசு உதவும். உலக தரத்திலான சிறந்த உட்கட்டமைப்பு மற்றும் வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற சாதக சூழ்நிலை ஆகியவை கொண்டுள்ளதற்காக குஜராத் மாநிலத்தை பால்-வி நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இங்கு பறக்கும் கார்கள் தயாரிக்கப்பட்டு, தேவைப்படும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் அமையும் பால்-வி நிறுவனம், ஆலை தொடங்கப்படும் முன்பே 110 பறக்கும் கார்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டர்களை முன்பே பெற்று விட்டது.

மதுரை டூ சென்னை இடைநில்லாமல் பறக்கலாம்
பறக்கும் காரில் 2 இன்ஜின்கள் இருக்கும்.  சாலையில் மணிக்கு 160 கிமீ வேகத்திலும், வானத்தில் 180 கிமீ வேகத்திலும் செல்லும். இந்த காரானது 3 நிமிடங்களில் பறக்கும் நிலைக்கு மாறும் திறன் பெற்றது.  ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 500 கிமீ தொலைவை சென்றடையும்.

Tags : road ,Gujarat ,flying car plant ,sky ,car plant , Gujarat, flying car plant
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...