×

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலுக்காக 18 நாட்களுக்கு மதுக்கடை மூடல்

திருமலை: ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலையொட்டி 18 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் குடிமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திராவில் ஜில்லா பரிஷத், மண்டல பரிஷத், பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு இந்த மாத இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் கர்னூலில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அனில்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் உள்ளாட்சித் தேர்தலை வெளிப்படையாகவும் எந்தவித முறைகேடுகளும் இல்லாமலும் நடத்த வேண்டும் என மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தேர்தலின் போது மது குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக 12ம் தேதி முதல் 29ம் தேதி வரை 18 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதனால் தேர்தல் அமைதியாகவும் சுமூகமாகவும், பொதுமக்களுக்கு எந்தவித சிரமம் இல்லாமலும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். குடிமகன்கள் அதிர்ச்சி: ஆந்திராவில் மதுக்கடைகள் மூடப்படுவது, குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாநில எல்லையோரங்களில் உள்ள தமிழகம், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்கு சென்று மதுவை வாங்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலர் இப்போதே மது பாட்டில்களை வாங்கி பதுக்க தொடங்கியுள்ளனர்.

ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கு தடை
ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி நகராட்சி தலைவர் பதவி பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காளஹஸ்தி பகுதியில் உள்ள ஊரந்தூர்,  நாராயணபுரம், அரவக்கொத்தூர், டி.எம்.கண்டிகை பஞ்சாயத்துகளையும், உடுமலப்பாடு பஞ்சாயத்தை சேர்ந்த தொம்மரபாளையம் கிராமத்தையும் காளஹஸ்தி நகராட்சியுடன் இணைக்கும்படி மாநில அரசு கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் காரணமாக, இந்த பஞ்சாயத்துகளை இணைக்க நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இதனால், இந்த பஞ்சாயத்துக்களுக்கும், காளஹஸ்தி  நகராட்சிக்கும் தேர்தலை தற்காலிகமாக நிறுத்திவைத்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Tags : Bartender ,Andhra Pradesh ,elections ,Bartender Closures , Andhra Pradesh, local elections, liquor bar closure
× RELATED ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி