×

கொரோனா வைரஸ் பீதி 20 விமானங்களின் சேவை ரத்து: வருகை, புறப்பாடு பாதிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் அதிகரித்ததுமே ஹாங்காங்கிலிருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு மட்டுமே முதலில் சோதனை நடந்தது. தற்போது அது படிப்படியாக அதிகரித்து சீனா, ஹாங்காங், தாய்லாந்து, குவைத், சார்ஜா, மலேசியா, இத்தாலி, ஈரான் உள்பட 12க்கும் அதிகமான நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் சுமார் 60 விமானங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அந்த நாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவதும் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை வரும் பயணிகளின் எண்ணிக்கை 35 சதவீதம் குறைந்தது. பயணிகள் வருகை குறைந்ததால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் ஹாங்காங் செல்லும் விமானம் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு முதல் குவைத் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மேலும் திங்கள் முதல் திருச்சி, மதுரை, கோவை செல்லும் உள் நாட்டு விமானங்கள் உள்பட 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று மட்டும் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.   

இந்நிலையில் பிராங்க்பர்ட்-சென்னை லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், குவைத்-சென்னை குவைத் ஏர்லைன்ஸ், தாய்லாந்து-சென்னை தாய் ஏர்லைன்ஸ், தோகா-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ், ஜெட்டா-சென்னை சவுதி ஏர்லைன்ஸ், குவைத்- சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ், ஷென்ெசன்ன்-சென்னை எஸ்எப் எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ், குவைத்-சென்னை ஏர்இந்தியா ஏர்லைன்ஸ், சார்ஜா- சென்னை ஏர்இந்தியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட சென்னைக்கு வரும் 9 சர்வதேச விமானங்களும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 9 சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து காலை 10.40க்கு சென்னை வந்து விட்டு  11.50க்கு கோலாலாம்பூர் செல்ல வேண்டிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டது. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

Tags : flights ,departure ,arrival , Corona virus, 20 flights canceled
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...