×

அமெரிக்க தூதரகம் அருகே ரவுடிகள் மீது குண்டு வீசிய விவகாரம் தீவிரவாத அமைப்புகளுடன் ரவுடி தம்பாவுக்கு தொடர்பு?

* சென்னை இன்ஸ்பெக்டர் ஒருவர் சிக்குகிறார்
* ஜாமர் கருவி, செல்போன் செயலி பயன்படுத்தியது அம்பலம்
* மத்திய உளவுத்துறை விசாரணை


சென்னை: அமெரிக்க துணை தூதரகம் அருகே ரவுடிகள் மீது குண்டு வீசிய விவகாரத்தில் தொடர்புடைய ரவுடி தம்பாவுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தடை செய்யப்பட்ட செல்போன் செயலி மற்றும் ஜாமர் கருவி பயன்படுத்தியதால் மத்திய உளவுத்துறை போலீசாரும் விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னையில் கடந்த 3ம் தேதி அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள அண்ணா மேம்பாலம் அருகே ரவுடிகள் சென்ற கார் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்போது, ரவுடி தம்பா தனது ஆதரவாளர்கள் மூலம் தாதாவாக உள்ள சிடி.மணி மற்றும் காக்காதோப்பு பாலாஜியை கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது உறுதியானது. இது தொடர்பாக தி.நகரை சேர்ந்த கல்லூரி மாணவன் மகேஷ் மற்றும் அவரது நண்பரான 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் செய்யாறு பகுதியில் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தண்டையார் பேட்டையை சேர்ந்த பிரசாந்த், கமாரூதின், ராஜசேகர், ஜான்(எ)ஜான்சன் ஆகிய 4 பேர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அதேபோல், தென்காசி நீதிமன்றத்தில் சதீஷ், ஹரீஷ், தமிழ்செல்வன்(எ) செல்வா என 3 பேர் சரணடைந்தனர். ஆனால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி தம்பா இதுவரை போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அதேபோல், வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான தாதாக்களான சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி ஆகியோரும் ஆந்திராவில் தலைமறைவாகிவிட்டனர். அவர்களையும் போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கிடையே ரவுடி தம்பா மத்திய உளவு துறை கண்காணிப்பில் இருந்து வந்தது தற்போது வெளியாகி உள்ளது.

ரவுடி தம்பா குறித்து போலீசார் கூறியதாவது:  
சென்னையில் யார் பெரிய தாதா என்ற போட்டி தென் சென்னை தாதா சிடி மணி, வடசென்னை தாதா காக்கா தோப்பு பாலாஜி மற்றும் புளியந்தோப்பு ரவுடியான தம்பா இடையே நடந்து வருகிறது. இந்த போட்டியில் தாதா சிடி மணிக்கும் காக்கா தோப்பு பாலாஜிக்கும் இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டு இருவரும் சில மாதங்களாக இணைக்கமாக செயல்பட்டு வருகின்றனர். தாதா சிடி மணி தென் சென்னையில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் கோடிகளில் புரண்டு வருகிறார். அவருக்கு ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆதரவும் உள்ளது. சில நாட்களுக்கு முன் உள்கட்சி தகராறில், தி.நகரில் உள்ள ஒரு வட்டச் செயலாளரை சி.டி.மணி கோஷ்டி கடத்திச் சென்றது. பின்னர் இனிமேல் மாவட்ட நிர்வாகிகளுக்கு எதிராக செயல்பட மாட்டேன் என்று உறுதியளித்ததால், அவரை விடுவித்தனர். இதனால் சி.டி.மணி மீது போலீசில் புகார் செய்ய எல்லோரும் பயந்து நடுங்குகின்றனர்.

அதேபோல் வட சென்னையில் காக்கா தோப்பு பாலாஜி வெளிநாடுகளில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வரும் கடத்தல் பொருட்கள் மற்றும் துறைமுகம் மூலம் வெளிநாடுகளுக்கு செம்மரம் கடத்தல் மற்றும் சவுக்கார்பேட்டையில் உள்ள நகை பட்டறை வியாபாரிகளிடம் வசூலிக்கும் மாமூல் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தென் சென்னை மற்றும் வடசென்னையில் அண்டர்கிரவுண்ட் வேலைகளில் இருவரை மீறி யாரும் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு இவர்கள் வளர்ந்து உள்ளனர். ரவுடி தம்பா, காக்கா தோப்பு பாலாஜியை ஒழித்து கட்டிவிட்டு அந்த இடத்திற்கு வர வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறான்.

ஆனால் அவனால் காக்கா தோப்பு பாலாஜி இடத்திற்கு வர முடியவில்லை. ரவுடி தம்பா பல கொலை, கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ரவுடி தம்பா குறித்து சரியான தகவல் சென்னை போலீசாரிடம் இல்லை என்று கூறப்படுகிறது. தம்பா புகைப்படமும் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவை தான். தற்போது தம்பா எந்த உருவத்தில் இருப்பான் என்றும் போலீசாருக்கே தற்போதைய புகைப்படம் கிடைக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கு காரணம், ரவுடி தம்பா வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை பொருள் கடத்தி வரும் குருவிகள் அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சென்னை துறைமுகம் வழியாக கடத்தல் பணிக்கு வடசென்னை தாதா காக்கா தோப்பு பாலாஜியை மீறி உள்ளே நுழைய முடியவில்லை, இது தான் காக்கா தோப்பு பாலாஜிக்கும் ரவுடி தம்பாவுக்கும் இடையே உள்ள நேரடி பகை.

அதேநேரம், ரவுடி தம்பா தீவிரவாதிகள் மட்டுமே பயன்படுத்தும் செல்போன் செயலி ஒன்று பயன்படுத்தி வருவது மத்திய உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சிறப்பு செயலியை ரவுடி தம்பாவுக்கு அவரது நெருங்கிய நண்பர்களான சதீஷ் மற்றும் மாலிக் ஆகிய இருவரும் தான் பதிவிறக்கம் செய்து வைத்து கொடுத்துள்ளனர். அந்த செயலி மூலம் பேசினால் உளவுத்துறையால் கூட இடைமறித்து கேட்க முடியாது. அந்த செயலி ஒருவகையில் சாட்டிலைட் போன் போன்றது. அதுமட்டும் இல்லாமல், ரவுடி தம்பாவுக்கு சதீஷ் மற்றும் மாலிக் தீவிரவாதிகள் தங்களது கார்களில் பயன்படுத்தும் ஜாமர் கருவிகளை தீவிரவாதிகளிடம் இருந்து துபாய் வழியாக கொண்டு வந்து ரவுடி தம்பா பயன்படுத்தும் காரில் பொருத்தியுள்ளனர். அந்த ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்ட காரில் இருப்பவர்கள் செல்போன் வைத்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் எங்கு செல்கிறார்கள் என்று அதிநவீன கருவிகளால் கூட செல்போன் சிக்னலை கண்டு பிடிக்க முடியாது. இந்த தகவல் மத்திய உளவுத்துறைக்கு தற்போது தான் தெரியவந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இந்து முன்னணி திருவள்ளூவர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தீவிரவாதி காஜா மொய்தீனை தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். காஜா மொய்தீன் பயன்படுத்தி வந்த செல்போன் செயலியை ஆய்வு செய்த போது தான் ரவுடி தம்பாவும் அதே செயலியை தனது செல்போனில் பயன்படுத்தி காஜா மொய்தீனுடன் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. அதைதொடர்ந்து மத்திய உளவுத்துறை ரவுடி தம்பாவை கடந்த 1 மாதமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்த தகவல் ரவுடி தம்பாவுக்கு தெரியவந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் தாதாக்களான சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜியை, ரவுடி தம்பா அமெரிக்க துணை தூதரகம் அருகே வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்.

ரவுடி தம்பா நினைத்து இருந்தால் சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜியை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த போதே வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தி கொலை செய்து இருக்கலாம். ஆனால் ரவுடி தம்பா அப்படி செய்யாமல், இரண்டு தாதாக்களையும் எச்சரிக்க வேண்டும். அதேநேரம் பெரிய தாதாவாக பேசப்பட வேண்டும் என்ற காரணத்தை மையமாக வைத்தே அமெரிக்க துணை தூதரம் அருகே வெடி குண்டு வீசும் இடத்தை தேர்வு செய்தது மத்திய உளவுத்துறை நடத்திய ரகசிய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால், அமெரிக்க துணை தூதரகம் அருகே வெடி குண்டு வீசிய விசாரணை அறிக்கையை மத்திய உளவுத்துறை சென்னை காவல் துறையிடம் கேட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் தீவிரவாதிகள் பயன்படுத்தும் செல்போன் செயலி மற்றும் காரில் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட ஜாமர் கருவியை ரவுடி தம்பாவுக்கு கொடுத்த சதீஷ் மற்றும் மாலிக்கை போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடி அனைத்துக்கும் துணையாக ரவுடி தம்பாவுக்கு சென்னை மேற்கு மண்டலத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருப்பதும் மத்திய உளவு துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவில் அந்த இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

* ரவுடி தம்பா செய்த 3 கொடூர கொலைகள்
2015ம் ஆண்டு ரவுடி தம்பா சூணாம்பேடு பகுதியில் வழக்கறிஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கு, கடந்த 2017ம் ஆண்டு திருப்போரூரில் தொழிலதிபர் ஒருவரை கொலை செய்த வழக்கு, அதே ஆண்டில் மற்றொரு தொழிலதிபரை கொலை செய்த வழக்குகள் உள்ளன. இந்த மூன்று வழக்கிலும் ரவுடி தம்பா கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Tags : US Embassy ,Rowdy Tampa ,terrorist organizations ,Rowdies ,bombing , US embassy, bomb, terrorist organization, Rowdy Tampa, contact?
× RELATED மும்பையில் செயல்பட்டு வரும் அமெரிக்க...