×

கடந்த 15 ஆண்டுகளில் தேசிய கட்சிகள் அறியப்படாத மூலங்களிலிருந்து ரூ.11,234 கோடி நன்கொடை: ரூ.1,612 கோடி பெற்று பாஜக முதலிடம்

டெல்லி: கடந்த 15 ஆண்டுகளில் 7 தேசிய கட்சிகளுக்கு அறியப்படாத மூலங்களிலிருந்து மட்டும் ரூ.11 ஆயிரத்து 234 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் (ஏ.டி.ஆர்) சார்பில்,  கட்சிள் பெற்ற நன்கொடைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், பாஜக, காங்கிரஸ்., திரிணாமுல் காங்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 7 தேசிய கட்சிகள் இந்திய தேர்தல்  ஆணையத்தில் சமர்பித்த வரவு செலவு கணக்கினை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஏ.டி.ஆர். தெரிவித்துள்ளது.

ஏ.டி.ஆர். வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள், தன்னார்வ பங்களிப்புகள், கூப்பன் விற்பனை, நிவாரண நிதிகள், பொதுக்கூட்டங்களில் திரட்டப்படும் நிதி உள்ளிட்ட பெயர் குறிப்பிடாத ரூ.20,000க்கும்  குறைவான நிதிகள் வருமான வரிக்கணக்கில், அறியப்படாத நிதி மூலங்கள் எனப்படுகின்றன. அந்த வகையில், மேற்கூறிய 7 தேசிய கட்சிகளும் 2004-05 முதல் 2018-19 வரையிலான நிதியாண்டுகளில் அறியப்படாத நிதிமூலங்கள் வழியாக  ரூ.11,234.12 கோடி வசூலித்துள்ளன. கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் இந்த கட்சிகள் மொத்தம் ரூ.2,512.98 கோடி நன்கொடையாக பெற்றுள்ளன. அதில், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக ரூ.1,612.04 கோடி (64%) பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 2018-19ல் ரூ.728.88 கோடி பெற்றுள்ளது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் பெற்ற ஒருங்கிணைந்த நன்கொடைகள் ரூ.3,902.63 கோடியாக உள்ளது என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Parties , National Parties donate Rs 11,234 crore from unknown sources over the last 15 years
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...