×

சாலை ஓரங்களில் நிற்பதால் பாதுகாப்பு இல்லை: நாகர்கோவிலில் லாரி பேட்டை அமையுமா?...ஓய்வு எடுக்க முடியாமல் தவிக்கும் டிரைவர்கள்

நாகர்கோவில்: நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே மகாராஜா அவிட்டம் திருநாள் நினைவு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை அநாதை மடம் என்றும் கூறுவார்கள். இந்த மைதானம் பொருட்காட்சி திடல் என்றும் அழைக்கப்படும். இந்த மைதானம் தான், நாகர்கோவில் மாநகராட்சியின் லாரி பேட்டையாக செயல்பட்டு வந்தது. இங்கு லாரிகள் நிறுத்துவதற்கு பணம் வசூலிக்க குத்தகை விடப்படுவதும் வழக்கம். ஆனால் மாநகராட்சி ஆணையராக சரவணக்குமார் பொறுப்பேற்ற பின், இந்த மைதானத்தை முழுமையாக மாற்றி அமைத்தார். குறிப்பாக லாரி பேட்டையை அங்கிருந்து இடமாற்றம் செய்தார். பாழடைந்து கிடந்த இந்த மைதானத்தின் சுற்றுச்சுவரை அகற்றி விட்டு, இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. மைதானத்தின் முன்புறம் நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.40 லட்சம் செலவில் இவை சீரமைக்கப்பட்டன. இந்த மைதானத்தின் ஒரு புறத்தில், ஆதரவற்றவர்களுக்கான அபயகேந்திரமும் செயல்படுகிறது. மேலும் மாநகராட்சியின் நுண் உரம் தயாரிப்பு மையமும் இயங்குகிறது. பொருட்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. லாரி பேட்டையை காலி செய்ததால், சுமார் ஆயிரம் லாரிகள் எங்கு நிறுத்துவது என தெரியாத நிலை உள்ளது.

குமரி மாவட்டம் கேரளாவின் எல்லையையொட்டி உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து சரக்குகள் கொண்டு வரும் லாரிகள், பாதுகாப்புக்காக இந்த லாரி பேட்டைக்கு வந்து செல்லும். டிரைவர், கிளீனர்கள் ஓய்வு எடுக்கவும், பாதுகாப்பாக லாரியை நிறுத்தி வைக்கவும் லாரி பேட்டை வசதியாக இருந்தது. மேலும் உள்ளூர் லாரிகளும் லாரி பேட்டையில் தான் நின்றன. இப்போது இந்த லாரி பேட்டை இல்லாததால், லாரிகள் ஆங்காங்கே சாலை ஓரங்களில் நிற்கின்றன. வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், கோணம், ஆசாரிப்பள்ளம், ஆரல்வாய்மொழி என நாகர்கோவிலை சுற்றி சாலை ஓரங்களில் லாரிகள் நிற்பதை காண முடிகிறது. இப்போது நாகர்கோவில் மாநகருக்குள் லாரிகள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் லாரிகள் நகருக்குள் வரக்கூடாது. திருவனந்தபுரம் செல்ல வேண்டிய லாரிகள் புறவழி சாலை வசதி இல்லாததால், எம்.எஸ். ரோடு வழியாக பார்வதிபுரம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகருக்குள் எந்த லாரிகளும் தடை செய்யப்பட்ட நேரத்துக்குள் வர அனுமதி இல்லை என காவல் துறையினர் கூறி உள்ளனர். எனவே நாகர்கோவிலில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், தொழில் கூடங்களுக்கு லோடுகள் கொண்டு வரும் லாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வரவில்லை என்றால், ரோட்டோரத்தில் தான் நிற்க வேண்டும். இதுவே லாரி பேட்டை இருந்தால், பாதுகாப்பாக நிறுத்தி டிரைவரும் ஓய்வு எடுக்க வசதியாக இருக்கும் என லாரி பேட்டை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் நடக்கின்றன. எனவே நான்கு வழிச்சாலையையொட்டி லாரி பேட்டை அமைந்தால் மிகவும் வசதியாக இருக்கும். குறிப்பாக பார்வதிபுரம் அருகே நான்கு வழிச்சாலையையொட்டி லாரி பேட்டை அமைக்க வேண்டும். நாகர்கோவிலில் இருந்து அரசு உணவு குடோன்களுக்கும், ரேஷன் கடைகளுக்கும் உணவு பொருட்களை கொண்டு செல்வதற்கும், ரயில்களில் இருந்து உணவு பொருட்களை பள்ளிவிளையில் உள்ள மத்திய அரசின் உணவு கிடங்கு மற்றும் மாநில அரசு உணவு குடோன்களுக்கு கொண்டு செல்லவும் சுமார் 500 லாரிகள் வரை இயங்குகின்றன. இந்த லாரிகளை ரோட்டோரத்தில் தான் ஆங்காங்கே நிறுத்துகிறோம். நான்கு வழிச்சாலை பணிகள் அமையும் இடத்தில் நிறுத்துகிறோம். இதனால் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் லாரி பேட்டை அமைக்க வேண்டும். ஏற்கனவே வடசேரியில் தற்போது ஆம்னி பஸ் நிலையம் செயல்படும் பகுதியில் தான் லாரி பேட்டை இருந்தது. அப்போதைய நகராட்சி அதிகாரிகள் பேசி, அநாதை மட மைதானத்துக்கு மாற்றினார்கள். இப்ேபாது அங்கிருந்தும் விரட்டி விட்டு விட்டனர். தொடர்ந்து எங்களை விரட்டினால் நாங்கள் என்ன செய்ய முடியும். எனவே லாரிகள் பாதுகாப்பாக நிற்க போதிய இட வசதியை செய்து தர வேண்டும் என்றனர்.

Tags : Nagercoil ,Safeguarding Road , Security, Nagercoil, Larry Bate, rest
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு