×

பழநி அருகே அடிப்படை வசதியின்றி அவதிப்படும் பழங்குடியினர்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா

பழநி: பழநி அருகே கத்தாளம்பாறையில் பழங்குடி மக்கள் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உதவ முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் அடர் வனப்பகுதிகளில் குகைகளில் வசித்து வந்த பளியர் இன மலைவாழ் மக்களை வனத்துறையினர் அழைத்து வந்து திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே மலையோர கிராமங்களில் தங்க வைத்துள்ளனர். இதன்படி பழநி மண்திட்டு, குதிரையாறு, பொந்துப்புளி, புளியம்பட்டி, கத்தாளம்பாறை, குட்டிக்கரடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பளியர் இன மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. மேலும், பள்ளி, ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழநி அருகே கத்தாளம்பாறையில் வசித்து வரும் பளியர் இன மக்கள் போதிய அடிப்படை வசதிகளின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு செல்ல உரிய வழி தெரியாமல் பரிதவித்து வருகின்றனர். இதனால் உரிய வேலையின்றி, கழிவறை வசதியின்றி, வனவிலங்குகளுக்கு பயந்து இடியும் நிலையில் உள்ள வீடுகளில் உயிரை பணயம் வைத்து வசித்து வருகின்றனர்.

இது குறித்து கத்தாளம்பாறையைச் சேர்ந்த நாகம்மா கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் சுமார் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு வீடு கட்டித் தரப்பட்டது. ஆனால், உறுதியாக கட்டித்தராததால் மேற்கூரைகளின் காரைகள் பெயர்ந்து வீடுகள் எப்போது இடிந்து விழும் என்று தெரியாத நிலையில் உள்ளது. மழை பெய்தால் வீட்டிற்குள் தண்ணீர் ஒழுகுகிறது. கழிவறை வசதி இல்லை. இதனால் இருள் சூழ்ந்த நேரங்களில் திறந்தவெளியில் வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இயற்கை உபாதையை கழிக்க வேண்டியுள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். ஊருக்கு ஒதுக்குபுறத்தில் மலையடிவாரத்தில் எங்களுக்கு குடியிருப்பு கட்டித் தரப்பட்டுள்ளது. ஆனால், சாலை வசதி என்பது அறவே இல்லை. மழை காலத்தில் ஊருக்குள் நீச்சல் அடித்துதான் செல்ல வேண்டும். சாலை சகதிக்காடாய் மாறி விடும். எனவே, மாவட்ட நிர்வாகம் எங்களது குடியிருப்புகள் மற்றும் சாலைகளை சீரமைத்துத்தர வேண்டும்’’ என்றார்.

செந்தில் என்பவர் கூறுகையில், ‘‘வனப்பகுதியை ஒட்டி வனத்துறையால் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலி செயலிழந்து விட்டது. அகழி தூர்ந்துவிட்டது. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் எங்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. வீடுகள் மிகவும் சிறிதாக இருப்பதால் அனைவரும் வீட்டிற்குள் படுக்க முடிவதில்லை. வெளியே படுக்கலாமென்றால் விலங்குகள் நடமாட்டம் உள்ளது. என்ன செய்வதென்று தெரியவில்லை. இதனால் தினமும் இரவு நேரங்களில் மரண பயத்துடன் தூங்க வேண்டியுள்ளது. மேலும், திறந்த வெளியில்தான் அடுப்பு வைத்து சமைத்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் எங்களது குறைகளை தீர்க்க முன்வர வேண்டும்’’ என்று தெரிவித்தார்.


Tags : Aboriginal People Near Palani: Will District Administration , Palani, infrastructure, tribal, district administration
× RELATED யானை தாக்கி விவசாயி பலி