×

சபரிமலையில் நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் : கொரோனா பரவலை தடுக்க தேவசம்போர்டு அறிவுறுத்தல்; திருப்பதி, ஷீர்டி கோயிலுக்கும் செல்ல கட்டுப்பாடு

டெல்லி : இந்தியாவிலுள்ள உலகப் பிரசித்திபெற்ற கோயில்களின் நிர்வாகங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 19 பேர், கேரளாவில் 12 பேர், உத்தரப் பிரதேசத்தில் 9 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மராட்டியம், லடாக் யூனியன் பிரதேசத்தில் தலா 2 பேர், கர்நாடகாவில் 4 பேர்,தெலுங்கானா, தமிழ்நாடு, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவர் ஆவர். இந்த 56 பேரின் உறவினர்களுக்கும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் சந்தேகப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை 12 மாநில அரசுகளும், மத்திய அரசும் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

சபரிமலை செல்வதை தவிர்க்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் பாதிப்பு ஏற்பட்டது, கேரளாவில். இன்னும் பாதிப்புகள் அங்கே தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில், மார்ச் 13-ம் தேதி மாதாந்திர மண்டலகால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்படுகிறது. ஆனால், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் ஐயப்ப தரிசனம் செய்ய மலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு திருவாங்கூர் தேவசம்போர்டு. அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக சபரிமலையில் மார்ச் 14-18 வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்றும் கோயிலில் மாத பூஜை வழக்கம் போல் நடைபெறும் என்றும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

ஷீர்டி சாய்பாபா கோயில்

அதே போல் புகழ்பெற்ற ஷீர்டி சாய்பாபா கோயிலில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கோயிலுக்குள் நுழையவோ, சாய்பாபாவை தரிசிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அச்சம் தணிகிற வரையிலும் இந்தத் தடை அமலிலிருக்கும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பக்தர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்.

திருப்பதி திருமலைக் கோயில்

திருப்பதி திருமலைக் கோயிலில் கொரோனாவைத் தடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருமலையில் பக்தர்கள் எவருக்கேனும் நோய் அறிகுறிகளான காய்ச்சல், சளி ஆகியவை ஏற்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உடனடி பரிசோதனை செய்ய நவீன மருத்துவக் கருவிகளுடன் மருத்துவக் குழுக்கள் இயங்கி வருகின்றன. அறிகுறி தென்படுகிற பக்தர்கள் திருப்பதியிலுள்ள ஸ்ரீவேங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Devotees ,Tirupati ,Shirdi ,Sabarimala ,Devasamboard ,corona spread ,Pilgrims ,Go to Restriction , Sabarimalai, Shirdi Saibaba, Tirupati, Corona
× RELATED திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்