×

மதுரையில் 104 ஆண்டு கற்கட்டிடம் காலியாகிறது: கலெக்டர் அலுவலகத்திற்கு தயாராகும் புதிய கட்டிடம்

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகம் இயங்கிவரும் 104 ஆண்டு வரலாற்று கற்கட்டிடத்திற்கு பதிலாக, புதிய கட்டிடம் கட்டும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், இன்னும் 6 மாதத்திற்குள் புதிய கட்டிடத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ள கற்கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சியில் கடந்த 1916ல் கட்டப்பட்டது. நூற்றாண்டு கடந்த, இந்த வளாகத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு ரூ.27 கோடியில் புதிய கட்டிடம் கட்ட திட்டமிட்டு, முதற்கட்டமாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2018 ஏப்ரலில் அடிக்கல் நாட்டி பணி தொடங்கியது. இந்த கட்டிடம் 4 தளத்துடன் வெள்ளை மாளிகை போன்ற தோற்றத்துடன் 10 ஆயிரத்து 900 சதுர மீட்டர் பரப்பளவில் கலை அம்சங்களுடன் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி பணி முடிக்கப்படவில்லை. ஏற்கனவே, திட்டமிட்டதை விட கட்டிடத்தின் பரப்பளவு 1,800 சதுர மீட்டர் அதிகரித்து, மதிப்பீடும் உயர்ந்தது. இதனால், மொத்த மதிப்பீடு ரூ.30 கோடியாக அதிகரித்தது. கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டதால், கட்டுமானப் பணியை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கட்டி முடித்து திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கூடுதலாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணியை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மாடிக்கு செல்வதற்கு தனிதனி படிக்கட்டுகளுடன் ‘லிப்ட்’ வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், இன்னும் 6 மாதத்திற்குள் புது கட்டிடத்தை திறந்து, அதில் கலெக்டர் அலுவலகத்தை செயல்பட வைக்க திட்டமிட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால், தற்போது கட்டிடத்தில் இறுதி கட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மொத்தம் 12 ஆயிரத்து 700 சதுர மீட்டர் பரப்பளவில் 4 தளத்துடன் அமைந்த இந்த பிரமாண்ட கட்டிடத்தில் 2 வாயில்கள் அமைந்துள்ளன. கலெக்டர், டி.ஆர்.ஓ. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தனி அறைகள், கூட்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 104 ஆண்டுகளுக்கு பிறகு புதிய கட்டிடத்திற்கு கலெக்டர் அலுவலகம் மாற தயாராகி வருகிறது.

Tags : office Office ,Madurai ,Collector , Office of the Collector
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...