×

ஏ.சி. பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் மீண்டும் எக்ஸ்பிரஸ் பஸ் இயக்க ஏழை,எளிய பயணிகள் கோரிக்கை

திருப்பூர்: பொள்ளாச்சி-திருப்பூர்-சேலம் வழித்தடத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ்சிற்கு பதிலாக அதிக கட்டணத்தில் ஏ.சி. பஸ் இயக்கப்படுவதால் ஏழை, எளிய பயணிகள், குறைந்த சம்பளத்திற்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏ.சி. பஸ்ஸை ரத்து செய்து எக்ஸ்பிரஸ் பஸ்ஸை மீண்டும் இயக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி-திருப்பூர்-பெருந்துறை-சேலம் ஆகிய வழித்தடத்தில் இரு எக்ஸ்பிரஸ் பஸ்கள் பல ஆண்டுகளாக இயக்கப்படுகிறது. தொழில் நிமிர்த்தமாக கூலித் தொழிலாளர்கள் திருப்பூர், பெருந்துறை, சேலம் வரை குறைவான கட்டணத்தில் சென்று வந்தனர். தற்போது இந்த இரு பஸ்களை கடந்த, 5ம் தேதி முதல் ஏ.சி. பஸ்கள், இயக்கப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சியில், காலை 7:20 மணிக்கு ஒரு பஸ்சும், 8 மணிக்கு மற்றொரு பஸ்சும் புறப்படுகிறது. இடைநில்லாது செல்லும் இந்த பஸ்சில், திருப்பூருக்கு, ரூ.76ம்; சேலத்துக்கு, ரூ.207ம் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்ச, கட்டணமாக, 34 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏற்கனவே இருந்த ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்களுக்கு மாற்றாகவே இந்த ஏ.சி. பஸ்கள் திடீரென இயக்கப்படுவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பணி நிமித்தமாக திருப்பூர் வந்து செல்லும், பணியாளர்கள், அலுவலர்கள் பலரும், கட்டணம் உயர்வால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வசதிபடைத்தவர்கள் மட்டுமே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எழை,எளிய, குறைந்த சம்பளத்தில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஏ.சி. பஸ்களை தவிர்த்து வருகின்றனர். சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்களில் பயணிக்கவே முற்படுகின்றனர். இதனால், இந்த பஸ்கள் புறப்படும்போதே கூட்ட நெரிசல் அதிகரிக்கிறது. நெகமம், செஞ்சேரிப்பிரிவு, சுல்தான்பேட்டை, காமநாயக்கன்பாளையம் என கிராமங்களை கடந்து செல்லும் இந்த பஸ்களில் கிராம மக்கள், ஏற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

காலையில், குறித்த நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் பாதிக்கின்றனர். இந்த வழித்தடத்தில் ஏ.சி. பஸ்களை ரத்து செய்து மீண்டும் எக்ஸ்பிரஸ் பஸ்களை இயக்கி வழியோர கிராம தொழிலாளர்கள் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏழை, எளிய பயணிகள், தொழிலாளர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : AC Bus
× RELATED நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்;...