×

குடிநீர் வசதி கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

நெல்லை: நெல்லை அருகே உள்ள மேல இலந்தைகுளம் பகுதியில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாஜ இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் எல்.டி.தாஸ், மேலஇலந்தைகுளம் உலகன் தலைமையில் அப்பகுதி மக்கள் காலிகுடங்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.குடிநீர் வசதி கேட்டு கோஷம் எழு ப்பிய அவர்கள், பின்னர் கலெக்டரிடம் அளித்த மனு:

எங்கள் ஊரில் சுமார் 600 வீடுகள் உள்ளன. நாங்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். மானூர் யூனியன் கருப்பனூத்து பகுதியில் இருந்து எங்களுக்கு குடிநீர் வரவேண்டும். மாதம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது.
எங்கள் ஊரில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் மக்கள் பங்களிப்பாக குறிப்பிட்ட தொகை தந்தால் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வரவழைக்கிறோம் எனக்கூறினார். அதன் அடிப்படையில் ஆழ்துளை கிணறு அமைத்து கிடைத்த தண்ணீரை எங்கள் தெருவுக்கு அளிக்காமல் இன்னொரு தெருவுக்கு அளித்து விட்டனர். இதனால் நாங்கள் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். மேலும் எங்களுக்கு ஊரக வேலைகளும் முறையாக கிடைப்பதில்லை. சாக்கடைகளும் சுத்தம் செய்யப்படவில்லை. தெரு விளக்குகளும் முறையாக எரிவதில்லை.கடந்த பல மாதங்களாக ஊருக்கு குடிநீர் கேட்டு போராடி வருகிறோம். எங்கள் பகுதிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : blockade collector ,Nellai , Nellai
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!