×

முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் பயன்பாடின்றி வீணாகும் அரசு வணிக வளாகங்கள்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஆலங்காடு பெரிய ஊராட்சியாகும். இங்கு அதிகளவில் விவசாயிகள் விவசாய கூலித்தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியை ஒட்டி இருந்தாலும் பல்வேறு தேவைக்கு அங்கிருந்து நடந்துதான் முத்துப்பேட்டைக்கு வரவேண்டும். ஏனென்றால் அருகில் தானே இந்த கிராமம் இருக்கிறது என்று பேருந்து ஓட்டுனர்கள் நினைக்கிறார்களோ என்னமோ, டிரைவர்கள் இங்கு பேருந்தை நிறுத்தி இப்பகுதி மக்களை ஏற்றி இறக்குவது குதிரை கொம்பாக உள்ளது. ஆனால் தூரத்தில் உள்ள கிராம மக்கள் முத்துப்பேட்டைக்கு ரொம்ப சுலபமாக வந்து தங்களது தேவைகளை நிறைவேற்றி செல்கின்றனர். அதனால் ஆலங்காடு கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடைதெருவில் அணைத்து பொருட்களும் கிடைக்கும் வகையிலும், அவைகள் குறைவான விலைக்கு பெரும் வகையிலும் ஒரு சந்தை உருவாக்கி தரவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் 2011ம் ஆண்டு கடைசி திமுக ஆட்சியில் அப்போதைக்கு ஆலங்காடு ஊராட்சி மன்ற தலைவராக திமுக பிரமுகர் இருந்ததால் ஊராட்சி முயற்சியில் கடைதெருவில் எஸ்ஜிஎஸ்ஒய் திட்டம் கிராம பகுதி சந்தை என்ற பெயரில் சுமார் 15லட்சம் செலவில் அன்றாடும் மீன்கள், காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் வகையில் வணிக வளாக கட்டிடம், ஓப்பன் சிமெண்ட் தளம், பொருட்களை சேமித்து வைத்துள்ளக் கொள்ள குடோன், இதனை பராமரிக்கும் அதிகாரிகளின் அலுவலகம், வந்து செல்லும் மக்கள் வசதிக்கு பெரியளவிலான கழிப்பறை கட்டிடம் என அனைத்தும் அங்கு கட்டப்பட்டது. ஆனால் அடுத்து வந்த அதிமுக அரசு இந்த கட்டிடங்களை இதுநாள்வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் வணிக வளாக கட்டிடம் வெளியூர் செல்லும் மக்களுக்கு சைக்கிள் ஸ்டாண்டாகவும், அப்பகுதியினருக்கு தேவையற்ற பொருட்களை கொட்டி வைக்கும் குடோனாகவும் உள்ளது. அதேபோல் பின்புறம் இருக்கும் ஓப்பன் சிமெண்ட் தளம் குடிமகன்களுக்கு பராகவும், சமூக விரோதிகள் கூடும் ஒரு பகுதியாகவும் உள்ளது. அதேபோல் குடோன் மற்றும் அதிகாரிகள் தங்கும் கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. அதேபோல் கழிப்பறை கட்டிடம் கதவுகள் காணாமல் போய் அதன் பொருட்களும் உடைக்கப்பட்டு பயன்படுத்த முடியாதளவில் உள்ளது. அதேபோல் கஜா புயலின்போது சேதமான மின் கம்பங்களும் இதில் விழுந்து கிடக்கிறது. மேலும், அபோதைக்கு வந்த புதிய மின் கம்பங்களும் அங்கு தேவையற்ற நிலையில் மக்களுக்கு இடையூறாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி அந்த பகுதி முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது. இதில் பாம்புகள், கொடிய விஷ ஜந்துக்கள் குடியேறி அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இப்படி கேட்பாரற்று கிடக்கும் இந்த வணிக வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் தன்னார்வ அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் இது நாள் வரை அதனை பயன்பாட்டிற்கு கொண்ட வரப்படாததால் நாளுக்குநாள் கட்டிடங்கள் வீணாகி மடிந்து வருவதுடன், அரசின் நல்லதொரு திட்டம் முடக்கப்பட்டு அதன் நிதியும் வீணாகி வருவது அப்பகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது. பல்வேறு ஆய்வுக்காக வரும் அதிகாரிகள் இதனை கண்டும் காணாதது போல் சென்று விடுகின்றனர். ஆகவே இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் இப்பொழுது புதியதாக பொறுப்பேற்றுள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் முயற்சி மேற்கொண்டு, இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த வணிக வளாக கட்டிடங்களை மறு சீரமைப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து இந்த வணிக வளாக கட்டிடம் வர காரணமாக இருந்த அப்போதைய திமுக ஊராட்சி மன்ற தலைவர் மோகன் கூறுகையில்: மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இந்த வணிக வளாகம் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியின் கடைசி நேரத்தில் இது கட்டப்பட்டது என்பதால் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் முடக்கி வைத்து விட்டனர். இதனால் இன்றைக்கு பயன்பாட்டிற்கு வராமலே வீணாகி வருவது வேதனையை தருகிறது. இதுகுறித்து பல அதிகாரிகளை சந்தித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி செய்தோம் எந்த பலனுமில்லை மாவட்ட கலெக்டர் இதனை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தற்பொழுது வந்துள்ள புதிய நிர்வாகமாவது இதனை முழு சீரமைப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இதன் மூலம் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள் என்றார்.

Tags : state ,village ,Muthupet , Muthupet
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...