×

எரிவாயு தகனமேடையில் மட்டுமே அனுமதி: மாநகராட்சி பகுதிகளில் உடலை தகனம் செய்ய தடை

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் எரிவாயுதகன மேடை தவிர இதர பகுதிகளில் உடல்களை எரியூட்ட மாநகராட்சி தடை விதித்துள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் தற்போது, ஒழுகினசேரி, வடிவீஸ்வரம், கருப்புகோட்டை, கரியமாணிக்கபுரம், செட்டிக்களம் சந்திப்பு, வைத்தியநாதபுரம், என்ஜிஓ காலனி ஆகிய பகுதிகளில் சுடுகாடு உள்ளது. இதில் சில சமுதாயங்களுக்கு சொந்தமான சுடுகாடாகும். இதில் ஒழுகினசேரியில் 10க்கும் மேற்பட்ட தகன மேடைகள் உள்ளன. இங்கு ெதாடர்ச்சியாக உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பெருநகரங்கள் போல் ஒழுகினசேரியில் நவீன தகனமேடை அமைக்கப்பட்டது. ஆனால், அது பயன்பாட்டிற்கு வராமல் அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை விணாக சென்றது. இதையடுத்து, நாகர்கோவிலில் மின்தகன மேடை அமைக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது. இதன்படி அப்போதைய நகர்மன்ற தலைவி மீனாதேவ்  முயற்சியால், கடந்த 12.08.2016 அன்று நாகர்கோவில் நகர் மன்ற கூட்டத்தில் எரிவாயு தகனமேடை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி வடசேரி புளியடி பகுதியில், ரூ.ஒரு கோடியில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், சிலர் நீதிமன்றம் சென்றதால், பணிகள் தொய்வு ஏற்பட்டு, பின்னர் நீதிமன்ற ஆணைய பெற்று எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நிறைவு பெற்றது. இதற்கிடையே பணிகள் முடிவடைந்தாலும், மீனாதேவ் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் எரிவாயு தகனமேடையை  பராமரிப்பது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது.

இந்நிலையில், ஆணையராக பொறுப்பேற்ற சரவணக்குமார், இந்த எரிவாயு தகனமேடையில் மேலும் அபிவிருத்தி பணிகள் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். இதன்படி அப்போதைய மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் மூலம் வஉசிதம்பரனார் துறைமுக கழகத்தின் நிதியுதவியில் ரூ.98.5 லட்சம் மதிப்பீட்டில் முகப்பு தோற்றம், இறந்தவர்களின் உறவினர்கள் அமர வசதியாக மண்டபம், யோகா மண்டபம், ஈமக்கிரியை சடங்குகள் மேற்கொள்ளும் கூடம், முடிமழிக்கும் அறை, கழிவறை, குளியல்  அறை போன்றவை அமைக்கப்பட்டன.  மேலும் இதனை பராமரிக்கும் பணிக்காக டெண்டர் கோரப்பட்டது. இதன்படி சேவா பாரதி அமைப்பின் தேசிய சேவா சங்கம் பாராமரிப்பு பொறுப்ைப ஏற்றது. இதனை தொடர்ந்து இதுவரை சோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரியில் கேட்பாரற்று இருந்த 18 உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன. மேலும் 5 உடல்கள் இங்கு தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சியின் இதர பகுதிகளில் உள்ள சுடுகாடுகளை சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தடை செய்து அதற்கு பதிலாக எரிவாயு தகனமேடையில் உடல்களை எரியூட்ட மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து சமுதாய தலைவர்களுடன்  வருகிற 12ம் தேதி மாநகராட்சி கூட்ட அரங்கில் மாநகர் நலப்பிரிவு சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Tags : corporation areas ,Nagercoil , Nagercoil
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது