×

வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராம பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்களால் ஆட்டோக்களில் மாணவிகள் ஆபத்தான பயணம்

வேலூர்: வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராம பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்களால் ஆட்டோக்களிலும், வந்து நிற்கும் தனியார் பஸ்களிலும் ஆபத்தான முறையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு அரசு போக்குவரத்துக்கழகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சித்தூர்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது துத்திப்பட்டு கிராமம். அதேபோல் மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ளது இடையன்சாத்து பகுதி, ராமலிங்கம் நகர் பகுதி. துத்திப்பட்டு கிராமத்தை அடுத்துள்ளது கட்டுப்புடி கிராமம். நகரை ஒட்டி அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என்பதால் இவ்வழியாக செல்லும் அனைத்து  டவுன் பஸ்களும் நின்று செல்லும் வகையில் பஸ் நிறுத்தங்கள் அமைந்துள்ளன. ஆனால் இந்த பஸ் நிறுத்தங்களில் அரசு டவுன் பஸ்கள் பெரும்பாலும் நிறுத்தப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

வேலூர் மாநகரை ஒட்டி வளர்ந்து வரும் கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என்பதால் இங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு மற்றும் தனியார்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களும், தொழிலாளர்களும் அதிகளவில் வேலூருக்கும், பிற பகுதிகளுக்கும் சென்று வர பெரும்பாலும் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். ஆனால் இந்த பஸ் நிறுத்தங்களில் பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள் நிற்காமல் செல்வதால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் ஆட்டோக்களில் நெருக்கியடித்தபடி அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இவற்றை போக்குவரத்து அதிகாரிகளோ, போலீசாரோ கண்டுகொள்வதே இல்லை.அப்படியே இவர்களை பார்த்து நிறுத்தி ஏற்றி செல்லும் தனியார் பஸ்களில் படிகளில் தொங்கியபடியும் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக துத்திப்பட்டு கிராம பஸ் நிறுத்தத்தில் ரூட் எண் 15, 15எஸ், 15என், 13, 11சி, 11, 11ஏ, 22, 24, 25, 7வி ஆகிய அரசு டவுன் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். ஆனால் இந்த பஸ்கள் எதுவுமே இங்கு நிற்பதில்லை என்றும், இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சென்று கேட்டாலும் சரியாக பதில் சொல்வதில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர் துத்திப்பட்டு கிராம மக்கள். இதேபோல் வேலூர் மாநகருக்குள் சேண்பாக்கம், முள்ளிப்பாளையம் பகுதிகளிலும், மேல்மொணவூர், அப்துல்லாபுரம், அன்பூண்டி, மோட்டூர் என கிராமப்புற பகுதிகளிலும் அரசு டவுன் பஸ்கள் பெரும்பாலும் நிறுத்தப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. எனவே, வேலூர் நகரை ஒட்டி அமைந்துள்ள மேற்கண்ட கிராமப்புற பகுதிகளிலும், நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளிலும் அரசு டவுன் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,village ,Vellore , Government bus
× RELATED பயணிகள் இன்றி வெறிச்சோடிய புதிய பஸ்...