×

கர்நாடகா பாணியில் ம.பி.யில் ஆட்சியை அபகரிக்கிறதா பாஜக ? : முக்கிய தலைவர் சிந்தியா, 6 அமைச்சர்கள் உள்பட 19 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமால் கவிழ்கிறது காங். ஆட்சி

போபால்  : மத்தியப் பிரதேசத்தில் 6 அமைச்சர்கள் உள்பட 19 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கவிழ்கிறது. முன்னதாக மத்தியப் பிரதேச அதிருப்தி தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  கட்சி விரோத நடவடிக்கைக்காக  ஜோதிர் ஆதித்ய சிந்தியா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  மத்தியப் பிரதேச அதிருப்தி தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் முக்கிய பொறுப்பு தராததால் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் முக்கிய தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 15க்கும் மேற்பட்டோருடன் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து இன்று காலை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சிந்தியா சந்திப்பு மேற்கொண்டார்.

பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார் ஜோதிராதித்ய சிந்தியா. சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் , 18 ஆண்டுகளாக காங்கிரஸ் உறுப்பினராக இருந்த நான் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது.கடந்த ஓர் ஆண்டாகவே கட்சியில் இருந்து நான் விலகும் சூழல் உருவாகி வந்தது,நாட்டு மக்களுக்கும் மாநில மக்களுக்கும் சேவை செய்வதே எப்போதும் எனது நோக்கம்.இனிமேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் எதுவும் செய்ய முடியாது என நம்புகிறேன்..எனது ஆதரவாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் புதிய தொடக்கத்தை மேற்கொள்ள உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவாளர்களான 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தங்களது  ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அனுப்பினர். பதவி விலகிய 19 பேரில் 6 பேர் அமைச்சர்கள் ஆவர். இவர்களது  ராஜினாமாவால் ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது.  

மத்தியப் பிரதேசத்தில் அரசியல் குழப்பம்!!

*மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பாஜ.வுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

*முதல்வர் வேட்பாளர் சிந்தியாவை நிறுத்த பல எம்எல்ஏக்களும் விரும்பினர். ஆனால், சீனியர் தலைவர் என்பதால் கமல்நாத்துக்கு மீண்டும் முதல்வர் பதவியை மேலிடம் அளித்தது. இதனால் சிந்தியா அதிருப்தி அடைந்தார்.

*சில நாட்களுக்கு முன்பு கமல்நாத் ஆட்சிக்கு சிக்கல் ஆரம்பித்தது. கமல்நாத் அரசுக்கு ஆதரவளித்த பிற கட்சி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாயினர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சில் பாஜ ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை பா.ஜ மறுத்தது. எனினும், மாயமான எம்எல்ஏக்கள் சிலர் போபால் திரும்பினர்.

*இந்த நிலையில், ம.பி அமைச்சர் 6 பேர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர், தனி விமானத்தில் மீண்டும் பெங்களூரூ சென்றுள்ளனர். இவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.

*சொந்த கட்சி எம்எல்ஏ.க்களையே ஜோதிராதித்யா சிந்தியா பெங்களூரூவுக்கு அழைத்து சென்று வைத்துள்ளதால், ம.பி. அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

*இதையடுத்து ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக முதல்வர் கமல்நாத் தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற அவசர கூட்டத்தில் 22 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

*இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்த பின், ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார். சிந்தியாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவாளர்களான 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தங்களது  ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அனுப்பினர். பதவி விலகிய 19 பேரில் 6 பேர் அமைச்சர்கள் ஆவர். இவர்களது  ராஜினாமாவால் ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது. 


Tags : BJP ,Karnataka ,Cynthia ,Congress MLAs ,ministers Regime ,Congress ,Aditya Scindia ,Jyotir , Madhya Pradesh, Jyotir Aditya Scindia, Congress, Venugopal, Resignation
× RELATED பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு...