×

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரிய மனு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து, சுமார் 20 பேரை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தது. இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டனர்.

மூன்று முறைகேடு வழக்குகளிலும் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கடந்த 10 ஆண்டுகளாக முறைகேடு நடைபெற்றுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கும் தேர்வு முறைகேட்டில் தொடர்பு உள்ளது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிசிஐடி விசாரணையால் உண்மை வெளிவராது. முறைகேடுகள் குறித்து உண்மையாக விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு, சிபிஐ, சிபிசிஐடி, டிஎன்பிஎஸ்சி 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : CBI ,TNPSC ,government ,TN ,Madras High Court , DNPSC, CBI, Government of Tamil Nadu, Madras High Court
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...