×

இந்தியாவில் கடந்த வாரம் 6 ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 47 ஆக அதிகரிப்பு


புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. நிலைமையை சமாளிக்க மத்திய  அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பலர், கொரோனா  தொற்றுடன் வருவதால், இங்கு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கையும் 47 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப், டெல்லி, உத்திரப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு பலர் ஆளாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியவர்கள் ஆவர். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச்  சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இவர் மார்ச் 1ம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருந்து வந்து இருந்தார். இந்த நிலையில் கொரோனாவை அரக்கனாக பாவித்து உருவபொம்மையை எரிக்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் ஈரானில் இருந்து திரும்பிய ஒருவர் உயிரிழந்துவிட்டார். இவர் கொரோனாவில் இறந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இதனிடையே மணிப்பூரில் மியான்மர் நாட்டு எல்லை அடைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இத்தாலி சுற்றுலா பயணிகள் 21 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த வாரம் 6 ஆக இருந்த  கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 47 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இதுவரை யாரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இறக்கவில்லை என  மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பீதி நிலவுவதால், வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில்  ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Tags : India ,coroners ,border blockade ,Myanmar ,Manipur , Corona, Virus, India, Health Department, China, Harsh Vardhan
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!