×

சென்னை விமானநிலையத்தில் அலர்ட்: கொரோனா பீதியில் சென்னை வந்து செல்லும் 18 விமானங்கள் ரத்து

சென்னை: கொரோனா பீதி காரணமாக பல விமான நிறுவனங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 20ம் தேதியில் இருந்து ஹாங்காங் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளை  மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அதோடு, மத்திய அரசு ஹாங்காங், சீனா உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கான விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்து, மீண்டும் ஹாங்காங் செல்லும் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பீதி காரணமாக இன்று சென்னை வரும் 9 விமானங்கள், புறப்படும் 9 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 1.30 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னை வந்துவிட்டு, மீண்டும் மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு சென்னையில் இருந்து குவைத் செல்லும் அந்நாட்டு குவைத் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. குவைத்தில் இருந்து சென்னை வரும் 3 விமானங்கள், தாய்லாந்து, கத்தார், ஷார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்விமானம் ரத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கொரோனா வைரஸ் பீதி காரணமாக வெளிநாடுகளில் இருந்து சென்னை வருபவர்களும் சென்னையில் இருந்து கவெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.  எனவே, பயணிகள் இல்லாத காரணத்தால் இந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். கொரோனா பீதி காரணமாக வெளிநாட்டு விமான சேவைகள் சென்னைக்கு  வருவது படிப்படியாக ரத்து செய்யப்பட்டது விமான பயணிகளிடையே  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,airport ,flights , Corona, Panic, Service, Cancellation, China, Flights, Thailand, Qatar, Kuwait, Sharjah
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...