×

சர்ச்சைக்கிடையே 2வது முறையாக ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கனி பதவியேற்பு: `நானே அதிபர்’ என போட்டியாளர் அப்துல்லா அறிவிப்பால் பதற்றம்

காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கனி 2வது முறையாக நேற்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லாவும் `நானே அதிபர்’ என தனக்குத்தானே அறிவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆப்கான் அரசுக்கு ஆதரவாக பாதுகாப்பு பணியில் ஈடுபட அமெரிக்கா தனது ராணுவ வீரர்களை அங்கு அனுப்பியது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 29ம் தேதி அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்ததை அடுத்து ஆப்கானில் இருந்து தனது படைகளை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஆப்கன் அரசு, தலிபான்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் தற்போதைய அதிபராக உள்ள அஷ்ரப் கனி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், கனியை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் தலைமை நிர்வாகியான அப்துல்லா அப்துல்லா ஏற்க மறுத்ததுடன், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் இந்த பிரச்னைக்கு ஆணையம் தீர்வு காணவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அதிபர் தேர்தல் தொடர்பான சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில், தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி புதிய அதிபராக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க அவர் பாரம்பரிய உடையுடன் தலையில் டர்பன் அணிந்து வந்திருந்தார். இதையடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கனி நேற்று 2வது முறையாக அதிபராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். அதேநேரத்தில் அதிபர் மாளிகைக்கு அருகேயுள்ள சபேதர் அரண்மனையில் போட்டி பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் அஷ்ரப் கனியின் முந்தைய ஆட்சியின்போது அவரது கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த அப்துல்லா அப்துல்லா போட்டி அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அப்போது `நானே ஆப்கானின் அதிபர்’ என அறிவித்தார்.

அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
அஷ்ரப் கனியும், அப்துல்லாவும் போட்டி போட்டு அதிபராக பதவியேற்கும் விழா நடைபெற்றபோது, அதை பார்க்க ஏராளமான பொதுமக்கள் அந்த வளாகத்தில் திரண்டிருந்தனர். அப்போது விழா நடந்த இடத்துக்கு அருகே அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அவர்கள் ஓட்டம்  பிடித்தனர். அதனை பொருட்படுத்தாமல் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Tags : Afghan ,President ,Ashraf Ghani ,term , 2nd term, Ashraf Kani, President of Afghanistan sworn in
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...