×

சூடானில் பிரதமரின் வாகனத்தை குறிவைத்து குண்டு தாக்குதல்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

கெய்ரோ: சூடானில் பிரதமர் அப்தெல்லா ஹேம்டாக் சென்ற வாகன அணிவகுப்பை குறிவைத்து நடத்திய தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். சூடான் நாட்டின் அதிபராக இருந்தவர் ஒமர் அல் பஷீர். இந்த நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஜனநாயக சார்பு போராட்டத்தால் சர்வாதிகாரியான அதிபர் பஷீரின் ஆட்சி அகற்றப்பட்டது. பின்னர் ராணுவத்துடன் கூட்டணி அமைத்து பிரதமராக அப்தெல்லா ஹேம்டாக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இதை தொடர்ந்து சூடானில் ஜனநாயக ஆட்சி அமலுக்கு வந்தது. பஷீர் ஆட்சி அகற்றப்பட்டு ஒரு ஆண்டு ஆன நிலையிலும் சூடானில் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதுடன், பண வீக்கமும் அதிகரித்து வருகிறது.

இங்கு 21 லட்சம் மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பிரதமர் அப்தெல்லா தனது அலுவலகத்தை நோக்கி பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க சென்றுக் கொண்டிருந்தார். தலைநகர் கார்ட்டோமில் அவரது அணிவகுப்பு வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது அதன் அருகே திடீரென குண்டு வெடித்து சிதறியது. இதில் பிரதமரின் பாதுகாப்புக்கு சென்ற 2 கார்கள் சேதமடைந்தன. காரில் சென்றுகொண்டிருந்த பிரதமர் அப்தெல்லா ஹேம்டாக் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இதையடுத்து அந்த இடத்தை போலீஸ் அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், பிரதமர் பாதுகாப்பாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தாக்குதலுக்கு தானியங்கி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.

Tags : Sudan , Sudan PM, vehicle, bombing
× RELATED பிடிஓவின் வாகனத்தை எட்டி உதைத்த...