×

உபி.யில் நடந்த வன்முறையின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் பெயர்கள் கொண்ட பேனரை அகற்ற வேண்டும்: அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி

அலகாபாத்: உத்தரப் பிரதேசத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் பெயர்களை கொண்ட பேனர்களை,  பொது இடங்களில் இருந்து அகற்றும்படி லக்னோ மாவட்ட நிர்வாகத்துக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.உத்தரப் பிரதேசத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்ட 50 பேர்  அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டன. மேலும், அவர்களின் பெயர்கள், தர வேண்டிய இழப்பீடு மற்றும்  போட்டோவுடன் லக்னோ நகரின் முக்கிய சந்திப்புகளில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் இழப்பீடு செலுத்த தவறினால், அவர்களது சொத்துகள்  பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்றம், `‘தனிநபரின் சொத்துக்களை பறிமுதல் செய்வது என்பது  மிகவும் அநியாயமானது’’ என்று கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கு பதிலளித்த மாநில அரசு, `‘இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தக் கூடாது.  அரசின் முடிவு என்பதால், இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது’’ என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  `‘போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் போட்டோக்களுடன் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை மதியம் 3 மணிக்குள் அகற்றிவிட்டு நீதிமன்றத்துக்கு  தெரியப்படுத்த வேண்டும். இந்த வன்முறை தொடர்பான அறிக்கையை லக்னோ மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர் வரும் 16ம் தேதிக்குள்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags : violence ,UP ,UP Allahabad High Court , violence ,UP, Allahabad ,High Court,
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...